பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

இம்ரான் கான் | கோப்புப் படம்
இம்ரான் கான் | கோப்புப் படம்
Updated on
1 min read

வஜிராபாத் (பாகிஸ்தான்): பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் காயம் அடைந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வருகிறார். அவருடன் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்று வருகிறார்கள். இந்த பேரணி இன்று வஜிராபாத் வந்தபோது, இம்ரான் கான் தனது பிரச்சார வாகனத்தின் உச்சியில் இருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவருடன் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 4 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.காயம் ஏற்பட்டதை அடுத்து இம்ரான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பேரணி, இஸ்லாமாபாத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இம்ரான் கானை கொல்ல வேண்டும் எனும் நோக்கில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது என பி.டி.ஐ கட்சி கண்டித்துள்ளது.

இம்ரான் கான் மீதான இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது பயணம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க இருந்தார். இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக அவர் தனது செய்தியாளர் சந்திப்பை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in