

பாகிஸ்தானில் பயணிகள் ரயில்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்; 50 பேர் காயமடைந்தனர்.
முல்தானிலிருந்து புறப்பட்ட ஜாகாரியா எக்ஸ்பிரஸும், லாகூரில் இருந்து புறப்பட்ட பாரீத் எக்ஸ்பிரஸும் கராச்சி நகரின் அருகே லன்ந்தி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.
இதில் ரயிலில் பயணம் செய்த 20 பேர் பலியாகினர். 50 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகேவுள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.
இன்னும் சிலர் ரயிலில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் மத்திய பகுதியில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர். 150 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.