Published : 29 Oct 2022 08:44 PM
Last Updated : 29 Oct 2022 08:44 PM

பயங்கரவாதத்திற்கு எதிரான டெல்லி பிரகடனம் - ஐநா பயங்கரவாத எதிர்ப்புக் குழு ஏற்பு

புதுடெல்லி: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கு எதிரான டெல்லி பிரகடனத்தை ஐநா பாதுகாப்பு அவையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு ஏற்றுக்கொண்டது.

ஐநா பாதுகாப்பு அவையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் சிறப்புக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், இணையதளம், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பங்கள் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவது, தொழில்நுட்பங்கள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது, ஆளில்லா விமானங்களை பயங்கரவாத தாக்குதலுக்குப் பயன்படுத்துவது ஆகியவற்றை தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியாக நிற்பது மற்றும் இவ்விஷயத்தில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், ஐநா பாதுகாப்பு அவையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இது டெல்லி பிரகடனம் என அறிவிக்கப்பட்டது. அதில், நவீன தொழில்நுட்பங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவதைத் தடுக்கவும், ஆளில்லா விமானங்கள் பயங்கரவாதிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஐநா பாதுகாப்பு அவையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதத்தை எந்த ஒரு மதத்துடனோ, நாட்டுடனோ நாகரிகத்துடனோ, இனத்துடனோ தொடர்புபடுத்தக்கூடாது என தெரிவித்த இந்தியா, உலகின் அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x