ராக்காவில் ஐ.எஸ். மீது தாக்குதல்

ராக்காவில் ஐ.எஸ். மீது தாக்குதல்
Updated on
1 min read

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள ராக்கா மீது அமெரிக்க ஆதரவு கிளர்ச்சிப் படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. மோசூல் நகரிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

சிரியா, இராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ராக்கா நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இராக்கின் மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து மீட்க, இராக் அரசு கூட்டுப் படை தீவிரமாகப் போரிட்டு வருகிறது.

இராக் ராணுவம், குர்து படை, ஷியா படைகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மோசூலில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர். தற்போது மோசூலின் பெரும்பகுதி அரசுப் படை கைவசம் வந்துள்ளது.

தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மோசூலில் உள்ள 19 எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைத்துள்ளனர். இதனால் அந்த நகரம் முழுவதும் பற்றி எரிகிறது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இதனிடையே ஐ.எஸ். அமைப்பின் தலைநகராக கருதப்படும் சிரியாவின் ராக்கா நகர் மீது அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயக படை (எஸ்.டி.எப்) தாக்குதலைத் தொடுத்துள்ளது. இந்த கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் விரர்கள் ராக்காவின் மூன்று முனைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராக்காவைச் சுற்றியுள்ள 10 கிராமங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஸ்டன் கார்டர் கூறியபோது, மோசூல் நகருக்குள் நுழைந்துள்ள இராக் படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்து வருகின்றனர். அதேநேரத்தில் ராக்காவிலும் மிகப்பெரிய தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in