

ஹெஹ்ரான்: ஈரானைச் சேர்ந்த இளம்பெண் சாஹர் தாபர். இவர் ஏஞ்சலினா ஜோலியைப் போன்றே முகத் தோற்றத்தைப் பெற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறப்பட்டு வந்தது.
ஈரானைச் சேர்ந்தவரான சாஹர் தாபர், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகர். இவர் ஏஞ்சலினாவைப் போன்றே முகத் தோற்றம் பெற விரும்பினார். இதனைத் தொடர்ந்து ஏஞ்சலினாவைப் போல தாடை எலும்புகள், நெற்றி, உதடுகள் பெற அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த தோற்றத்தை பெறுவதற்காக முகத்தில் 50 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக சாஹர் தெரிவித்தார். சிலர் இவர் ஒப்பனை மூலம் இவ்வாறு தோற்றமளிக்கிறார் என்றும் கூறி வந்தனர். இந்த சர்ச்சைகளுக்கிடையேதான் சாஹர் தாபர் ஈரானில் பிரபலமானார்.
இந்த நிலையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மதத்தை புண்படுத்தியதாகவும், வன்முறையைப் பரப்பும் விதமாகச் செயல்பட்டதாகவும் கூறி 2019-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 14 மாதங்களுக்கு பிறகு விடுதலையான சாஹரின் உண்மையான முகத் தோற்றம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
இதன்மூலம் அவர் முகத் தோற்றத்திற்காக எந்த அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளவில்லை என்பதும், வெறும் ஒப்பனை காரணமாகவே அவர் அவ்வாறு தோற்றமளித்தார் என்பதும் உறுதியாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாஹர் தாபரின் இயற்பெயர் பாத்திமா. தான் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக சாஹர் தெரிவித்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் மட்டும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்க்து.