

அண்டார்டிகா: காலநிலை மாற்ற விளைவை கண்காணிப்பதில் நமது விஞ்ஞானிகள் வகிக்கும் பங்கு, நமது நிகழ்காலத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருக்கிறார்.
அண்டார்டிக்காவில் காலநிலை மாற்றத்தினை கண்காணிப்பதற்காக சிறப்பு தளம் ஒன்றை 200 மில்லியன் டாலர் செலவில் நியூசிலாந்து அமைத்துள்ளது. இந்த நிலையில் அண்டார்டிக்காவில் உள்ள நியூசிலாந்து கண்காணிப்பு தளத்தில் விஞ்ஞானிகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா 72 மணி நேரம் பயணத்திற்கு பிறகு சந்தித்தார்.
விஞ்ஞானிகளை சந்தித்த பிறகு ஜெசிந்தா பேசும்போது, “நாம் இந்தப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற நெருக்கடிகளை சமாளிப்பதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். காலநிலை மாற்ற விளைவை கண்காணிப்பதில் நமது விஞ்ஞானிகள் வகிக்கும் பங்கு, நமது நிகழ்காலத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது" என்றார்.
அண்டார்டிக்காவில் அமைந்துள்ள ராஸ் பகுதியில் 15%- நிலப்பரப்பிற்கு நியூசிலாந்து உரிமை கோரி வருகிறது. மேலும் ஆஸ்திரேலியாவும் இப்பகுதியில் தளம் அமைத்து காலநிலை மாற்ற விளைவுகளை கண்காணித்து வருகிறது.
காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பெரும் வெள்ளம், புயல், அதீத மழையினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் ஆர்டிக், அண்டார்டிக்கா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் நியூசிலாந்து போன்ற நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.