Published : 22 Nov 2016 12:00 PM
Last Updated : 22 Nov 2016 12:00 PM

உலக மசாலா: அட! சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் கட்டில்!

சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஜு கிங்வா, சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்குப் புதிய கட்டில் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

1993-ம் ஆண்டு, ஜு கிங்வாவின் மனைவிக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, இடது சிறுநீரகம் அகற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வலது சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். ஏற்கெனவே ஒரு சிறுநீரகத்துடன் இருப்பவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுவது ஆபத்து என்பதால், இயற்கையான முறையில் கற்களை அகற்ற வேண்டும் என்றும் தினமும் சில நிமிடங்கள் தலைகீழாக நின்றால் கற்கள் இடம் மாறும் என்றும் ஆலோசனை வழங்கினார்கள் மருத்துவர்கள்.

தானே ஒரு புதுவிதமான கட்டிலை உருவாக்கினார் ஜு கிங்வா. மனைவியைப் படுக்க வைத்து, கட்டிலோடு சேர்த்துக் கட்டினார். டிராக்டர் இன்ஜின் மூலம் கட்டிலுக்கு அதிர்வுகளை உண்டாக்கினார். கட்டில் மேலும் கீழும் செல்லும்போது சிறுநீரகக் கற்கள் இடம்பெயர்ந்தன.

‘நான் விவசாயி. என் மனைவியால் தலைகீழாக நிற்க முடியாது. அவரைக் காப்பாற்றுவதற்கு எனக்கு வேறு வழி இல்லை. அதனால் நானே ஒரு கட்டிலை உருவாக்கினேன். இந்தக் கண்டுபிடிப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது. கட்டில் மேலும் கீழுமாகச் சுற்றி வரும். கட்டிலும் அதிரும். தினமும் 10 நிமிடங்கள் என்று 5 நாட்கள் என் மனைவி கட்டிலில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். வலியின்றி சிறுநீரகக் கற்கள் வெளியேறிவிட்டன. விஷயம் பரவியது. பலரும் என்னிடம் இந்தக் கட்டிலைச் செய்து தரும்படிக் கேட்டனர். நான் மருத்துவ உபகரணங்களுக்கான உரிமையைப் பெறவில்லை என்பதால் செய்து தரவில்லை. ஆனால் என் மனைவிக்காகச் செய்த கட்டிலை, இலவசமாக உபயோகித்துக்கொள்ள அனுமதித்தேன். எங்கள் கிராமத்தில் மட்டும் மூன்று பேர், சிறுநீரகக் கற்கள் பிரச்சினையில் இருந்து வெளிவந்து விட்டனர். காப்புரிமை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்’ என்கிறார் ஜு கிங்வா.

அட! சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் கட்டில்!

ஸ்வீடனில் வீட்டில் செய்யக்கூடிய ரொட்டிகள் மிகவும் பிரபலமானவை. சுவையான இந்த ரொட்டிகளைப் பாதுகாப்பதற்காக, காப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தங்கள் ரொட்டிகளை இங்கே கொடுத்துவிட்டுச் செல்லலாம். ரொட்டிகளைப் பத்திரமாகப் பராமரித்து, வாடிக்கையாளர்கள் திரும்பி வந்தவுடன் ஒப்படைத்து விடுவார்கள். இதற்கு ஒரு வாரக் கட்டணமாக, 1,500 ரூபாய் வசூலிக்கிறார்கள்.

‘5 ஆண்டுகளுக்கு முன்பு ரொட்டிகளுக்கான காப்பகத்தை ஆரம்பிக்கும்போது, வாடிக்கையாளர்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் ஆராய்ச்சிக்காக 130 ஆண்டுகால ரொட்டியிலிருந்து இன்றைய ரொட்டி வரை எங்களிடமிருந்து வாங்கிச் சென்றனர். அதற்குப் பிறகுதான் எங்கள் நிறுவனம் புகழ்பெற ஆரம்பித்தது. குறிப்பிட்ட வெப்பநிலையில் கண்ணாடி பாட்டில்களுக்குள் ரொட்டிகளைப் பராமரிப்பதால், எத்தனை ஆண்டுகளானாலும் ரொட்டிகள் கெட்டுப் போவதில்லை’ என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான சார்லட்டோ.

ரொட்டி காப்பக வாடகைக்கு, புதிய ரொட்டிகளையே செய்து விடலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x