

புதுடெல்லி: இங்கிலாந்திடம் ஒரு காலத்தில் அடிமைபட்டு கிடந்த இந்தியாவைச் சேர்ந்த ரிஷி சுனக், அந்நாட்டுக்கே பிரதமராகியுள்ளதை இந்தியர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து பிரபல இந்திய தொழிலபதிர் ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1947-ம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் போது, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேசுகையில், ‘‘இந்திய தலைவர்கள் அனைவரும் திறன் குறைந்தவர்கள், பலவீனமானவர்கள்’’ என கூறினார்.
ஆனால் இன்று சுதந்திரம் பெற்ற 75-ம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராவதை பார்க்கிறோம். வாழ்க்கை அழகானது. சர்ச்சில் கூற்று பொய்த்தது’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது தொடர்பாக கடந்த 1947-ம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேசுகையில், ‘‘இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தால், அதிகாரம் வஞ்சர்கள், அயோக்கியர்கள், கொள்ளையர்கள் கைகளுக்கு செல்லும். இந்திய தலைவர்கள் அனைவரும் திறன் குறைந்தவர்கள், பலவீனமானவர்கள். அவர்கள் தேனாக பேசுவார்கள், பகல் கனவு காண்பவர்கள். ஆட்சி, அதிகாரத்துக்காக அவர்களுக்குள்ளே மோதிக் கொள்வர். அரசியல் சண்டையில், இந்தியா ஒன்றும் இல்லாமல் போகும்’’ என்றார்.