Published : 24 Oct 2022 08:33 PM
Last Updated : 24 Oct 2022 08:33 PM

இங்கிலாந்து பிரதமராகிறார் ரிஷி சுனக்

ரிஷி சுனக் | கோப்புப் படம்

லண்டன்: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்க இருக்கிறார்

இங்கிலாந்தில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக கடந்த ஜூலையில் அறிவித்ததை அடுத்து, அடுத்த பிரதமருக்கான தேர்வு தொடங்கியது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே, இங்கிலாந்தின் பிரதமராக இருக்க முடியும். இதனால், கட்சித் தலைவருக்கான தேர்தலில் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக்கும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரசும் போட்டியிட்டனர். பல கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில் தொடக்கத்தில் ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு இருந்தது. எனினும், இறுதியில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

45 நாட்கள் பிரதமராக இருந்த நிலையில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினமா செய்வதாக இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லசிடம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். இதையடுத்து, புதிய கட்சித் தலைவருக்கான தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பின்னர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். ரிஷி சுனக்கிற்கு மற்றொரு போட்டியாளராக இருந்த பென்னி மார்டன்ட்டும் போட்டியிடும் முடிவை கைவிட்டார். இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு கன்சர்வேட்டி கட்சியின் எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி திருப்பங்களை அடுத்து மன்னர் சார்லஸ் தனது பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் திரும்புகிறார். அவர் பக்கிங்ஹாம் அரண்மனை திரும்பியதும் ரிஷி சுனக்கிற்கு முறைப்படி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பிரதமர் பதவி ஏற்கும் தேதி முடிவு செய்யப்பட்டு ரிஷி சுனக் பிரதமராக பதவி ஏற்பார். அவருக்கு மன்னர் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவிக்காலத்தில் 15 பேருக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். லிஸ் ட்ரஸ்தான் அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த கடைசி பிரதமர். இங்கிலாந்தின் மிக குறுகிய கால பிரதமரும் லிஸ் ட்ரஸ்தான். மன்னர் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கும் முதல் பிரதமர் ரிஷி சுனக்.

தென்னாப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்தில் குடியேறிய இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ரிஷி சுனக். இவருக்கு வயது 42. இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஒரு இந்தியர். இன்போசிஸ் நிறுவனர் நராயணமூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதியரின் மகள். பிரதமராக பதவி ஏற்க இருக்கும் ரிஷி சுனக், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இங்கிலாந்து பிரதமர். அதோடு, அதல் கிறிஸ்தவர் அல்லாத பிரதமர். முதல் இந்து பிரதமர். இந்து மத நம்பிக்கைகளைப் பின்பற்றி வரும் ரிஷி சுனக், கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானபோது பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்தே பதவி ஏற்றார். தனது மத நம்பிக்கை குறித்து கடந்த 2020ல் பேசிய சுனக், அது தனக்கு வலிமையையும், அர்த்தத்தையும் கொடுப்பதாகக் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x