

இராக் மொசூல் நகரின் புறப்பகுதியில் ஐஎஸ் அமைப்பை குறிவைத்து அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் பலியாகினர். இதில் மூன்று குழந்தைகளும் அடங்குவர்.
மொசூல் நகரின் பெரும்பாலான பகுதிகள் அரசுப் படைகளின் கட்டுபாட்டில் வந்துள்ள நிலையில் ஐஎஸ் வசமுள்ள மிதமுள்ள பகுதிகளை கைப்பற்ற அரசுப் படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
இந்த நிலையில் மொசூல் நகரின் புறப்பகுதியில், அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் மூவர் குழந்தைகள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் "குடியிருப்புப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுவது பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என உள்ளூர் கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, இராக்கின் பெரிய நகரமான மொசூல், கடந்த 2014-ல் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனைத் தொடர்ந்து ஐஎஸ் அமைப்புக்கும், இராக் அரசுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்தது.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள மொசூல் நகரை மீட்க போர் தொடங்குவதாக இராக் அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இராக்கின் அரசுப் படைகளுக்கும், ஐஎஸ் அமைப்புக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.