Published : 19 Oct 2022 07:21 AM
Last Updated : 19 Oct 2022 07:21 AM

கடத்தப்பட்ட சாமி சிலைகள் உட்பட ரூ.33 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலை பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

புதுடெல்லி: கடத்தப்பட்ட சாமி சிலைகள் உட்பட ரூ.33 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலைப் பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் பெரும்பாலானவை சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பல்வேறு கோயில்கள் மற்றும் அரண்மனைகளில் இருந்தசிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் திருடப்பட்டன. அவை வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க இந்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்ட தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 307 பழங்கால கலைப் பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.33 கோடி ஆகும். இந்நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் மற்றும் அமெரிக்க உள் துறை பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவின் (எச்எஸ்ஐ) தற்காலிக துணை சிறப்பு அதிகாரி டாம் லாவ் பங்கேற்றனர்.

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட 307-ல், 235 பொருட்கள் சுபாஷ் கபூரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மீட்கப்பட்டவை ஆகும். ஆப்கானிஸ்தான், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து மற்றும் சில நாடுகளிலிருந்து சிலைகளை கடத்த சுபாஷ் உதவி யுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

கலைப் பொருட்கள் விற்பனை யாளர் நான்சி வெய்னரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பொருட்களும் நயெப் ஹாம்சியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 1 பொருளும் இதில் அடங்கும். இதுதவிர, மற்ற 66 பொருட்கள் இந்தியாவிலிருந்து பல்வேறு சிறிய கடத்தல்காரர்களால் திருடப்பட்டவை ஆகும்.

தமிழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தொன்மையான சிலைகளை வாங்கி அமெரிக்காவில் விற்பனை செய்து வந்தார் சுபாஷ் கபூர். இது தொடர்பான புகாரின் பேரில், 2011-ல் இன்டர்போல் உதவியுடன் சுபாஷ் கபூர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். 2012-ல் நாடு கடத்தப்பட்ட அவர் இப்போது தமிழ்நாட்டின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x