

இரானில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 40 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இரானின் தலைநகர் டெஹ்ரானுக்கும், இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்துக்கு இடையே உள்ள சிம்மன் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இந்த ரயில் விபத்து நடத்துள்ளது.
இந்த விபத்து குறித்து இரான் அரசு தரப்பில், "இரானின் வடக்கு பகுதியான டம்பிரிஸிலிருந்து மாஷாத் நகருக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், பனியின் காரணமாக சிம்மன் மாகாண பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது சிம்மன் மாகாணத்திலிருந்து மாஷாத் நகருக்கு சென்றுக்கொண்டிருந்த மற்றொரு ரயில் பயணிகள் ரயிலின் மீது மோதியது.
இதில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகளும், மஷாத் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயிலின் நான்கு பெட்டிகளும் தீப்பிடித்து கொண்டன. இதில் 44 பேர் பலியாகினர். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது"என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்து குறித்து நீதி விசாரணைக்கு இரான் அரசு உத்தரவிட்டுள்ளது. இரானில் சமீபத்தில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது.