Published : 18 Oct 2022 06:31 AM
Last Updated : 18 Oct 2022 06:31 AM

கம்யூனிஸ்ட் மாநாட்டில் கல்வான் மோதல் வீடியோ வெளியீடு - பகையை தூண்டுவதாக சீனா மீது புகார்

பெய்ஜிங்: சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, அவரே அதிபராகவும் பதவியேற்பார். தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் தற்போது 2-வது முறையாக அதிபராக பதவி வகித்து வருகிறார்.

இந்த பின்னணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார். முதல்நாள் மாநாட்டில் அவர் பேசும்போது, தைவானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். "அமைதியான முறையிலோ அல்லது ராணுவ நடவடிக்கை மூலமாகவே சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்" என்று அவர் கூறியது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

மாநாட்டில் இந்தியா குறித்து ஜி ஜின்பிங் நேரடியாக எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ மாநாட்டில் திரையிடப்பட்டது.

அந்த வீடியோவில் சீன ராணுவத்தால் கல்வான் கதாநாயகன் என்று போற்றப்படும் கர்னல் சி பாபோ பேசியுள்ளார். அவர் கூறும்போது, “கடினமான சூழ்நிலையில் நாங்கள் எல்லையை பாதுகாத்து வருகிறோம். நாட்டின் ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார். அதோடு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்கள் மோதும் காட்சியும், சீன வீரர்கள் கொடி ஏந்தி நிற்கும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச நிபுணர்கள் புகார்

இதுகுறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது, “அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சிக் காலத்தில் இந்திய எல்லை பிரச்சினை, தைவான் பிரச்சினை பூதாகரமாகி உள்ளன. தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் வீடியோ திரையிடப்பட்டிருப்பதன் மூலம் சீன மக்களிடையே இந்தியாவுக்கு எதிரான பகையை தூண்டும் முயற்சியில் அதிபர் ஜி ஜின்பிங் ஈடுபட்டிருக்கிறார். அவர் 3-வது முறை அதிபராக பதவியேற்றால் சர்வதேச அரங்கில் பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும்" என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x