Published : 17 Oct 2022 04:30 PM
Last Updated : 17 Oct 2022 04:30 PM

வீட்டை விட்டு வெளியேறி திருமணம்: தலிபான்களின் கல் அடியைத் தவிர்க்க இளம்பெண் தற்கொலை

தலை முதல் கால் வரை மறைக்கும் நீல நிர புர்கா ஆடையில் ஆப்கன் பெண்கள் | கோப்புப் படம்

காபூல்: வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதற்காக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் கல் அடி பெற்று உயிரை விடுவதைத் தவிர்க்க இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தபோது அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 90களில் அவர்கள் நடத்திய அதே காட்டுமிராண்டித் தனமான ஆட்சியையே கையில் எடுத்துள்ளனர். பெண் கல்விக்கு தடை, இசை, நடனம், பொழுதுபோக்குக்கு தடை. விளையாட்டுகள் கூடாது. ஷியா, சன்னி மற்றும் இன்னும்பிற மொழிவாரியான முஸ்லிம்களுக்கு இடையே பகைமை. பொது இடங்களில் மரண தண்டனை என நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான், ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலையால் இறந்துள்ளார். அவர் அண்மையில் அவரது அண்டை வீட்டுக்காரருடன் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டார். அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணாமாகியிருந்ததால் அவர்கள் இருவர் மீதும் தலிபான் அரசு குற்ற வழக்கு பதிவு செய்தது. அதன்படி சம்பந்தப்பட்ட ஆணுக்கு பொது இடத்தில் கடந்த 13-ஆம் தேதியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்பெண்ணுக்கு வரும் வெள்ளிக்கிழமை பொது இடத்தில் கல்லால் அடித்துக் கொலை என்று தண்டனை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பெண் தனது துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து கோர் மாகாண தலிபான் தலைவர், “பெண்கள் சிறை இல்லாததால் அந்தப் பெண்ணுக்கு பொது இடத்தில் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை விதித்திருந்தோம். இந்நிலையில் அவரே தற்கொலையால் இறந்தது தெரியவந்துள்ளது” என்றார்.

ஆப்கனில் அண்மைக்காலமாக பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அவர்களை பொது இடத்தில் மரண தண்டனைக்கு உட்படுத்த உறுதியாக இருப்பதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

கருகும் பெண்கள், பெண் பிள்ளைகள்: ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் 6-ஆம் வகுப்புக்கு மேல் பெண் பிள்ளைகள் பள்ளி செல்ல முடியாது. ஆப்கன் பெண்கள், பெண் குழந்தைகள் கடுமையான அடிப்படை உரிமைகள் பறிப்பு வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள் மறுக்கப்படுகின்றன. அங்குள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் கூட தனியாக வரும் பெண்களை காரில் ஏற்றுவதில்லை. ஏனெனில் ஆண் துணை இல்லாமல் பெண் வெளியே வருவது குற்றம் என்று தலிபான் அரசு எச்சரித்துள்ளது.

தலிபான் ஆட்சிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் ஊடகத் துறையில் 80% பெண்கள் வேலை இழந்துள்ளனர். அங்கு 1 கோடியே 80 லட்சம் பெண்கள் சுகாதாரம், கல்வி, சமூக உரிமைகள் மறுக்கப்பட்டு தவிக்கின்றனர் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x