

நியூயார்க்: அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. பணவீக்கப் பிரச்சினை உலகம் முழுவதும் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கரோனாவுக்குப் பிறகு உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. நாளும் விலைவாசி அதிகரித்து வருகிறது. அமெரிக்காவிலும் விலைவாசியினால் நாளும் விமர்சனங்களை பைடன் அரசு சந்தித்து வருகின்றது . விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்து ஜோ பைடன் நேர்காணல் ஒன்றில் பேசும்போது, “நமது பொருளாதாரம் வலிமையாக உள்ளது. பணவீக்கம் உலகம் முழுவதும் உள்ளது. அமெரிக்காவைவிட பிற இடங்களில் பணவீக்கம் மோசமாக உள்ளது. மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் சரியான கொள்கை இல்லை என்பதே பிரச்சினைக்குக் காரணம். டாலரின் மதிப்பு உயர்வதை நினைத்து நான் கவனம் கொள்ளவில்லை. ஆனால் பிற நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வருவதைக் கண்டு கவலை கொண்டுள்ளேன். பொருளாதாரத்தை சரி செய்ய பெரும் செல்வந்தர்களின் வரிகளை குறைக்கும் பிரிட்டனின் யோசனையுடன் நான் ஒன்றுப்படவில்லை” என்று தெரிவித்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்த பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் எடுக்கும் முயற்சிகளை பைடன் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.