Published : 16 Oct 2022 12:29 PM
Last Updated : 16 Oct 2022 12:29 PM

பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் 200 சடலங்கள் கண்டெடுப்பு

மாதிரிப்படம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மேல்தளத்தில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் நிஷ்டர் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், நிஷ்டர் மருத்துவமனைக்கு இருநாட்களுக்கு முன் சென்றபோது மருத்துவமனையில் பிணங்கள் இருக்கும் தகவலை ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நிஷ்டர் மருத்துவமனையின் பிணவறையின் கதவை திறக்க குஜ்ஜார் உத்தரவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது பிணவறையில் 200 க்கும் அதிகமான உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து குஜ்ஜார் கூறும்போது, “ முதலில் மருத்துவமனை ஊழியர்கள் பிணவறையின் கதவை திறக்கமாட்டேன் என்றனர். நான் போலீஸுக்கு இதுகுறித்து புகார் அளிப்பேன் என்றவுடன் கதவை திறந்தார்கள். கல்லூரி முதல்வரை இதுகுறித்து கேட்டபோது மருத்துவ மாணவர்களின் கல்வி ரீதியான தேவைக்காக இந்த உடல்கள் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் பிணங்கள் அதிகளவில் சிதைவடைந்து இருந்தன. 50 ஆண்டுக்கால பாகிஸ்தான் வரலாற்றில் நான் இப்படியொரு நிகழ்வைப் பார்த்ததில்லை” என்றார். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் அடங்கிய விசாரணைக் குழுவை பஞ்சாப் அரசு நியமித்துள்ளது. அரசு மருத்துவமனையில் உரிமை கோரப்படாத 200 க்கும் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x