உலக பட்டினி குறியீடு 2022 வெளியீடு | 107-வது இடத்தில் இந்தியா: மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

புதுடெல்லி: நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் (99), இலங்கை (64) வங்கதேசம் (84), நேபாளம் (81), மியான்மர் (71) போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன. ஆசிய நாடுகளில் போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி இருக்கிறது.

எப்படிக் கணக்கிடப்படுகிறது? உலக பட்டினி குறியீடு ஆனதை கணக்கிட 4 முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்கின்றனர். அவை 1.ஊட்டச்சத்து குறைபாடு, 2. சைல்டு ஸ்டன்டிங் 3. சைல்டு மார்டாலிட்டி மற்றும் 4. சைல்ட் வேஸ்டிங். முதல் காரணி ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் போதுமான கலோரி உட்கொள்ளாமல் இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது, சைல்ட் ஸ்டன்டிங் என்பது நாட்டின் மக்கள் தொகையில் 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற கணக்கு. சைல்ட் வேஸ்டிங் என்பது 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கேற்ற உடல் எடை மற்றும் உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கான கணக்கு. இதற்கான தரவுகள் ஐ.நா. சபை, அதன் கிளை அமைப்புகளான யுனிசெப், எஃப்ஏஓ மற்றும் உலக வங்கியிடம் இருந்து பெறப்படுகிறது. இந்தப் பட்டியலில் சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் 5க்கும் கீழ் GHI ஸ்கோர் பெற்று பட்டினி இல்லாத நாடாக முன்னணியில் உள்ளன.

ப.சிதம்பரம் கேள்வி: இந்நிலையில் சர்வதேச பட்டினி குறியீட்டை சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு பிரதமர் மோடி எப்போது ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, ஸ்டன்டிங், வேஸ்டிங் போன்ற பிரச்சினைகளைக் கவனிப்பார்? இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். சர்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 107 ஆக உள்ளது. 121 நாடுகளில் 107 என்பது கிட்டத்தட்ட கடைசி இடம் தானே" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 2014ல் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே தொடர்ந்து இந்தியா இந்தக் குறியீட்டில் பின்னடைவை சந்திப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in