

பிரேசிலிலிருந்து கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 81 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் கொலம்பியாவில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 76 பேர் பலியாயினர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லாமியா பொலிவியா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் 146 ரக விமானம், பிரேசிலின் சாவ் பலோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொலம்பியாவின் மெடலின் நகருக்கு திங்கட்கிழமை இரவு புறப்பட்டது. இதில் பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 72 பயணிகளும் 9 விமான ஊழியர்களும் பயணித்தனர்.
மெடலின் நகரில் இன்று நடைபெற இருந்த கோபா சுடாமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக பிரேசில் வீரர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.
இந்நிலையில், கொலம்பியாவின் மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தில் மின்சார கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் விமானம் வெடித்துச் சிதறியது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமானப்படை ஹெலிகாப்டரும் அப்பகுதிக்குச் சென்றது. தேடுதல் வேட்டையின்போது 76 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரேசில் கால்பந்து வீரர் ஆலன் ரஸ்செலும் ஒருவர் ஆவார். இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.