

மியான்மரில் ராக்கைன் மாநிலத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒரு மாதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
யாங்கூன் நகரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இங்கு கடந்த ஒரு வாரமாக நடந்த சண்டையில் கிட்டதட்ட 30 பேர் பலியாகினர். இந்தச் சண்டையில் மியான்மர் ராணுவம் முதல் முறையாக ஹெலிக்காப்டர்கள் மூலம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட செய்தியில், "போராட்டக்காரர்களில் 70 பேர் பலியாகியுள்ளனர். 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்" என்று கூறியுள்ளது.
மியான்மர் ராணுவம் அத்து மீறல்
மியான்மர் ராணுவம் போராட்டக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டுவர அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில், கிட்டதட்ட 400 வீடுகள் தரைமட்டமாகின எனவும், மேலும் மியான்மர் ராணுவத்தினர் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி,வீடு புகுந்து பெண்களை பலாத்காரம் செய்வதாக ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் ஊடகத்தின் இந்தச் குற்றச்சாட்டை மியான்மர் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
முன்னதாக, 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியான்மரில் ‘நிறவெறி’ காலக்கட்டத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களை வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என்று மியான்மர் அரசு கூறிவருகிறது.
2012ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி மியான்மர் அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது. ஆகஸ்ட் 22-ம் தேதி அரசு தரப்பு செய்திகளின் படி 88 பேர் கலவரத்தில் பலியானதாகவும் இதில் முஸ்லிம்கள் 57 பேரும், பவுத்தர்கள் 31 பேரும் அடங்குவர் என்றும் கூறப்பட்டது.
ஆனால் நிறைய வீடுகள், சுமார் 2500 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 90,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் தங்கள் இருப்பிடம் விட்டு அகதிகளாக வெளியேற நேரிட்டது.
அதன் பிறகு அங்கு தொடர்ந்து பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.