Published : 07 Oct 2022 06:44 AM
Last Updated : 07 Oct 2022 06:44 AM
பாங்காக்: தாய்லாந்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில், முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்தின் நாங் புவா லம்பு மாகாணத்தில் உள்ளது உதய் சவான் நகரம். இங்குள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்துக்கு நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஆசிரியை உட்பட 9 பேர் இறந்தனர். வெடிச் சத்தம் முதலில் கேட்டதும், பட்டாசு வெடிப்பதாக அக்கம் பக்கத்தினர் கருதினர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்துக்கு உள்ளே நுழைந்தார். அங்கு ஒரு அறையில் 2 வயது முதல் சுமார் 30 குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை கேள்விபட்டதும், வெறிச்செயலில் ஈடுபட்ட நபரை பிடிக்க பாதுகாப்பு படை யினருக்கு தாய்லாந்து பிரதமர் உத்தரவிட்டார். தாக்குதல் நடத்திய நபர், அக்கம் பக்கத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி தனது வீட்டுக்கு தப்பிச் சென்றார். அங்கு தனது மனைவி, குழந்தை ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தாய்லாந்து காவல் துறையில் பணியாற்றியுள்ளார். போதைப் பொருள் தொடர்பான குற்றச் சாட்டில் அவர் கடந்தாண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார் என தாய்லாந்தின் நக்லங் காவல் நிலைய கண்காணிப்பாளர் சக்ரபத் விசிட்வைத்யா கூறியுள்ளார். தாய்லாந்தில் பலர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளனர். சட்டவிரோதமாக இங்கு ஆயுதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும், துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்படும் சம்பவம் தாய்லாந்தில் மிக அரிது. இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டில் ராணுவ வீரர் ஒருவர் சொத்து தொடர்பான சண்டையில் கோபம் அடைந்து 4 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 29 பேர் உயிரிழந்தனர், 57 பேர் காயம் அடைந்தனர்.
மெக்சிகோவில் 18 பேர்...
மெக்சிகோவின் சான் மிகுல் டோடோலாபன் சிட்டி ஹாலில், நேற்று முன்தினம் ஒரு கும்பல் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மேயர் கன்ராடோ மெண்டோசா, அவரது தந்தையும், முன்னாள் மேயருமான ஜூவான் மெண்டோசா, 7 போலீஸ் அதிகாரிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல், வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவத்துக்கு ‘லாஸ் டெகிலெரோஸ்’ என்ற போதை கடத்தல் கும்பல் சமூக ஊடகம் மூலம் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் இதை போலீஸார் இன்னும் உறுதி செய்யவில்லை. இச்சம்பவத்துக்கு மெக்சிகோ அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT