Published : 07 Oct 2022 06:48 AM
Last Updated : 07 Oct 2022 06:48 AM

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தி கொலை - பின்னணி தகவல்கள்

கடத்தி கொலை செய்யப்பட்ட ஜஸ்தீப் சிங், அவரது மனைவி ஜஸ்லீன் கவுர். குழந்தை ஆரூஹி.

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தி, கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், ஹோசிராபூர் மாவட்டம், ஹர்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங் (36). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இவர்களது 8 மாத பெண் குழந்தை ஆரூஹி.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மெர்சட் பகுதியில் குடும்பத்துடன் வசித்த ஜஸ்தீப் சிங், அங்கு சரக்கு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்தார். அவரது அண்ணன் அமன்தீப் சிங்கும் (39) நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார்.

கடந்த 3-ம் தேதி ஜஸ்தீப் சிங்கும், அமன்தீப் சிங்கும் அலுவலகத்தில் இருந்தனர். ஜஸ்தீப் சிங்கின் மனைவி ஜஸ்லீன் கவுர், 8 மாத குழந்தை ஆரூஹியும் உடன் இருந்தனர்.

அப்போது அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியை காட்டி மிரட்டி குழந்தை உட்பட 4 பேரையும் காரில் கடத்திச் சென்றார். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை உட்பட 4 பேரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து மெர்சட் பகுதி போலீஸார் கூறிய தாவது: கடத்தப்பட்ட 4 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஜீசஸ் மானுவேல் சல்காடோ (48) என்பவரை கைது செய்துள்ளோம். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 4 இந்தியர்களையும் இவர் கைகளை கட்டி கடத்திச் செல்வது தெரியவந்துள்ளது.

ஜஸ்தீப் சிங்கின் அலுவலகத்தில் ஜீசஸ் மானுவேல் சல்காடோ ஊழிய ராக பணியாற்றி உள்ளார். ஏதோ ஒரு காரணத்துக்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு பழிவாங்கும் வகையில் ஜஸ்தீப் சிங்கையும் அவரது குடும்பத்தினரையும் கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

கைது செய்யப்பட்ட ஜீசஸ்மானுவேல் சல்காடோ பல்வேறு கொள்ளை வழக்கு களில் தொடர்புடையவர். ஒரு வழக்கு தொடர்பாக அவர் 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார். கைது செய்ய சென்றபோது அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் உடல்நலம் தேறியபிறகு விசாரணை நடத்துவோம். கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x