

தெஹ்ரான்: ஈரான் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட நிகா ஷாகாராமி எனும் இளம்பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரானில் கடந்த 20-ஆம் தேதி ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தார் 16 வயதான இளம் ராப் பாடகரான நிகா ஷாகாராமி. இந்த நிலையில், நிகா ஈரான் பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்த தகவல் நிகாவின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்படவில்லை.
கடைசி போன் அழைப்பில் நிகா தனது தோழியிடம் ”ஈரான் பாதுகாப்புப் படையினர் என்னை பின்தொடர்கிறார்கள்” என தெரிவித்துருக்கிறார். அதுதான் நிகாவிடம் இருந்து வந்த கடைசி அழைபேசி அழைப்பு என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஈரான் தலைநகரில் உள்ள சீர்திருத்த மையத்தில் உள்ள பிணவறையில் நிகாவின் உடலை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டனர். நிகாவின் முக்கு மற்றும் தாடை கடுமையாக ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர். மேலும், நிகா பாதுகாப்புப் படையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நிகாவின் உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், அவரது சொந்த ஊரில் நிகாவின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில், நிகாவின் உடலை பாதுகாப்புப் படையினர் அபகரித்து வேசியன் நகரில் அடக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நிகாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டி போராட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டப் பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.