Published : 06 Oct 2022 09:31 AM
Last Updated : 06 Oct 2022 09:31 AM

காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி: இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு

ஜெனீவா: ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், காம்பியாவில் குழந்தைகள் இறப்புடன் 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட 4 மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த சிறு குழந்தைகளின் உயிரிழப்பு நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு வேதனை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவிக்கிறேன். சந்தேகத்துக்குரிய 4 இருமல் மருந்துகள் குறித்தும் இந்தியாவின் மெய்டன் ஃபார்மாசுட்டிக்கல்ஸ் லிமிடட் நிறுவனத்திடமும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

சர்ச்சைக்குரிய 4 மருந்துகள்: ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகள் தான் தற்போது விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன. இதுவரை இந்த 4 மருந்துகளின் தயாரிப்பு நிறுவனமானது உலக சுகாதார நிறுவனத்திற்கு இவற்றின் பாதுகாப்பு தன்மை மற்றும் தரம் பற்றி எதுவும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இவற்றில் ஏற்றுக்கொள்ளத்தக்கதைவிட அதிகளவில் டை எத்தலீன் க்ளைக்கால் மற்றும் எத்திலீன் க்ளைக்கால் ஆகியன உள்ளது தெரியவந்துள்ளது. இந்த மருந்துகளில் உள்ள மூலப் பொருட்கள் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவையே. இதனால் அடிவயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், தலைவலி, மனநிலையில் குழப்பம், சிறுநீரக பாதிப்பு ஆகியன ஏற்படலாம்.

காம்பியா நாட்டு சுகாதார அமைச்சகமானது கடந்த மாதம் பாராசிட்டமால் சிரப் பயன்பாட்டைத் தவிர்க்கக் கூறியிருந்தது. அப்போது அங்கு 28 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் இப்போது இருமல் மருந்தால் 68 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் மத்திய மருந்துகள் தரம் கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பிய தகவலின்படி சம்பந்தப்பட்ட நிறுவனம் மாசுபட்ட மருந்துகளையே காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பது உறுதியாகியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மருந்துகள் அனைத்துமே சட்டவிரோத கள்ளச் சந்தை மூலம் காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் உள்நாட்டு, உலகச் சந்தையிலும் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x