

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மீதான புதிய இ-மெயில் புகாருக்கு ஆதாரம் இல்லை என அந்நாட்டு புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஹிலாரி வெற்றி பெறுவார் என அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் புகார்களைக் கூறி வாக்கு சேகரித்தனர்.
ட்ரம்புக்கு எதிராக பெண்கள் புகார் கூறியதால் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இதுபோல, ஹிலாரிக்கு இ-மெயில் விவகாரத்தால் பின்னடைவு ஏற்பட்டது. அதாவது இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய போது (2009-13) தனது தனிப்பட்ட இ-மெயில் முகவரியை அரசு தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஏற்கெனவே ஆய்வு செய்த எப்பிஐ, ஹிலாரி மீதான புகாரை விசாரிக்க முகாந்திரம் இல்லை என கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. எனினும், ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார். ஹிலாரி தனது தனிப்பட்ட இ-மெயிலை அரசு பணிக்குப் பயன்படுத்தியதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாகவும், இதுகுறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண் டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இ-மெயில் விவகாரம் தொடர்பாக ஹிலாரி மீது புதிதாக ஒரு புகார் கூறப்பட்டது. அதை ஆய்வு செய்ய எப்பிஐ முடிவு செய்தது. இதனால் அவரது செல்வாக்குச் சரிந்து, ட்ரம்புக்கு ஆதரவு பெருகியது. எனினும், இந்த புகார் குறித்து எப்பிஐ ஆய்வு செய்து தேர்தலுக்கு முன்பாகவே முடிவை அறிவிக்க வேண்டும் என்று ஹிலாரி கூறியிருந்தார்.
இந்நிலையில், எப்பிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமே நேற்று முன்தினம் கூறும்போது, “ஹிலாரி மீதான புதிய இ-மெயில் புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால், தனிப்பட்ட இ-மெயிலை பயன்படுத்தியதில் எவ்விதத் தவறும் இல்லை என கடந்த ஜூலை மாதம் அறிவித்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு எவ்வித முகாந்திரமும் அதில் இல்லை” என்றார்.
தேர்தல் நெருங்கிய நிலையில், எப்பிஐ-யின் இந்த அறிவிப்பு, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஹிலாரியின் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் ஹிலாரி வெற்றி பெறுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.