Published : 05 Oct 2022 07:13 PM
Last Updated : 05 Oct 2022 07:13 PM

துபாயில் பிரமாண்டமான இந்து கோயில் திறப்பு: சிறப்புகள் என்னென்ன?

துபாயில் அமைந்துள்ள இந்து கோயில்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரமான துபாய் நகரில் இந்து கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை பக்தர்கள் தரிசக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் அரபு கட்டிடக் கலையை இணைத்து இந்தக் கோயில் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் குறித்து பார்ப்போம்.

துபாய் நகரின் ஜெபல் அலி கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அனைவரும் பார்வையிடும் வகையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. துபாய் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் அமீரகத்திற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதீர் ஆகியோர் இணைந்து கோயிலின் தொடக்க விழாவில் பங்கேற்று இருந்தனர். இது சாத்தியமான நிலையில், அமீரகத்தில் வாழ்ந்து வரும் 35 லட்ச இந்தியர்களுக்கு உறுதுணையாக இயங்கி வரும் அமீரக அரசுக்கு இந்திய தூதரகம் நன்றியை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

A post shared by Hindu Temple Dubai (@hindutempledubai)

சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இந்தக் கோயில் இருப்பதாகவும். அதன் மூலம் இந்தத் தொடக்க விழாவில் வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து உள்ளதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அர்ச்சகர்கள் ‘ஓம் சாந்தி ஓம்’ என மந்திரம் சொல்ல, மேளதாளங்கள் முழங்க அமர்க்களமாக இந்த விழா நடந்துள்ளது. இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதி ‘வழிபாட்டு கிராமம்’ என அறியப்படுகிறது. இங்கு 7 தேவாலயங்கள், குருநானக் தர்பார் சீக்கிய குருத்வாரா மற்றும் இந்து கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்பு அம்சங்கள்

  • இந்தக் கோயில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முறைப்படி பார்வையாளர்களின் தரிசனத்திற்கு இப்போதுதான் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
  • அமீரகத்தில் உள்ள மிகவும் பழமையான இந்து கோயிலான சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் தான் இது என உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
  • சுமார் 70,000 சதுர அடி கொண்ட வளாகத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2020 பிப்ரவரி வாக்கில் கோயில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • இந்தக் கோயிலின் உட்புறம் முழுவதும் பளிங்குக் கற்களால் அமைந்துள்ளது. இதன் தளத்தில் மணிகள் அமைந்துள்ளன. வெளிப்புறத்தில் இந்திய மற்றும் அரபு கலைகளை கொண்டு அழகுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தூண்களிலும் இந்த கலைநயம் தென்படுகிறது.
  • கோயிலில் மொத்தம் 16 தெய்வங்கள் எழுந்தருளி உள்ளன.
  • இந்தக் கோயிலின் பிரதான பிரார்த்தனை அறையின் மையப்பகுதியில் பிங்க் நிறத்தில் தாமரைப் பூ 3டி வடிவில் பதிக்கப்பட்டுள்ளது.
  • 1000 முதல் 2000 ஆயிரம் பேர் வரையில் இந்தக் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காலை 6.30 முதல் மாலை 8 மணி வரையில் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி உண்டு என அதன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்ள முன்பதிவு அவசியம்.
  • வரும் நாட்களில் திருமண உட்பட இந்து சடங்குகளை மேற்கொள்வதற்கான பல்நோக்கு கூடம் ஒன்றும் இங்கு அமைய உள்ளதாக தகவல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x