Last Updated : 08 Nov, 2016 08:20 AM

 

Published : 08 Nov 2016 08:20 AM
Last Updated : 08 Nov 2016 08:20 AM

ஹிலாரி கிளின்டன், டொனால்டு ட்ரம்ப் இடையே கடும் போட்டி: அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் - புதிய அதிபர் ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்பு

உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஹிலாரி கிளின்டன், டொனால்டு ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவில் 4 ஆண்டு களுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இப் போது அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது. இதனால் நாட்டின் 45-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அமெரிக்காவைப் பொருத்த வரை, அதிபர் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வாக் களிப்பதில்லை. மாறாக நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங் கள் மற்றும் கொலம்பியா (மாகாணத்தின் கீழ் வராத வாஷிங்டன் நகரம்) மாவட்டத் திலிருந்து 538 தேர்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக பொது மக்கள் இன்று வாக்களிப்பார்கள்.

இந்த வாக்குகள் மாகாண அளவிலேயே நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் அடிப்படையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிந்துவிடும்.

எனினும், இந்த தேர்வாளர்கள் புதிய அதிபர் மற்றும் துணை அதிபரை டிசம்பர் 19-ம் தேதி முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். இதில் வெற்றி பெற குறைந்தபட்சம் 270 தேர்வாளர்களின் ஆதரவு தேவை. புதிதாக தேர்ந்தெடுக்க ப்படும் அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமா 2-வது முறையாக அதிபர் பதவி வகித்து வருவதால், அந்நாட்டு சட்டப்படி மீண்டும் அந்தப் பதவியை வகிக்க முடியாது. இதனால் அவரது ஆளும் கட்சியின் சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் (69) அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதன்மூலம் முக்கிய கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இதில் வெற்றி பெற்றால் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பார். மேலும் இந்தப் பதவியை முதன்முறையாக எட்டிப் பிடித்த முன்னாள் அதிபரின் மனைவி என்ற பெருமையும் கிடைக்கும். இவரது கணவர் பில் கிளின்டன், ஜனவரி 1993 முதல் ஜனவரி 2001 வரை அதிபராக பதவி வகித்துள்ளார்.

இதுபோல முக்கிய எதிர்க் கட்சியான குடியரசு கட்சி சார்பில் கோடீஸ்வர தொழிலதிபரான டொனால்டு ட்ரம்ப் (70) போட்டியிடுகிறார். அரசியல் அனுபவம் இல்லாத இவர் திடீரென அரசியலில் களமிறங்கி உள்ளார். டொனால்டு ட்ரம்ப் தொடக்கம் முதலே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

வெளியுறவுத் துறை அமைச் சராக இருந்தபோது தனது தனிப்பட்ட இ-மெயில் சர்வரை அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தியதாக ஹிலாரி மீது குற்றம்சாட்டப்பட்டது.

இறுதிக்கட்ட பிரச்சாரம்

தேர்தல் நெருங்கிய நிலையில், இரு கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஹிலாரி வடக்கு கரோலினா மாகாணத்தில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். இதுபோல, மிச்சிகன் மாகாணத்தில் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.

“அமெரிக்கர்களுக்கு அச்சுறுத் தலாக உள்ள வெளிநாட்டு சக்திகளை திருப்பி அனுப்புவதற்கு இதுதான் இறுதி வாய்ப்பு” என ட்ரம்ப் தனது இறுதி பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

“நமது குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கு எதுமாதிரியான நாடு வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதுதான் அதிபர் தேர்தல். எனவே சிந்தித்து வாக்களியுங்கள்” என ஹிலாரி பேசினார்.

ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு

ஹிலாரிக்கு 81 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஒரு இணையதளம் (பைவ் தர்டி எய்ட்) ஏற்கெனவே நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்தது. இந்நிலையில், ஹிலாரி மீதான புதிய இ-மெயில் புகார் குறித்து ஆய்வு செய்யப் போவதாக எப்பிஐ ஒரு வாரத்துக்கு முன்பு அறிவித்தது.

இதன் பிறகு இந்த இணைய தளம் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் ஹிலாரிக்கான வெற்றி வாய்ப்பு 65.3 சதவீதமாகக் குறைந் துள்ளது. ஹிலாரியின் வெற்றி வாய்ப்பில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், ட்ரம்பின் வெற்றி வாய்ப் பான 34.6 சதவீதத்தோடு ஒப்பிடும் போது அதிகமாகவே உள்ளது.

இதனால் ஹிலாரிக்கான ஆதரவு பெருகும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x