

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் கிழக்கு ஜாவாவில் நேற்று (சனிக்கிழமை) நடந்த போட்டியில் அரெமா அணியும், பெர்சிபையா சுராபாயா ஆகிய அணிகள் மோதின.
இதில் 3-2 என்ற கோல் கணக்கில் பெர்சிபையா அணி வெற்றி பெற்றது. சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் அரெமா அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கோபம் கொண்டு மைதானத்துக்குள் நுழைந்தனர். இதனால் கலவரம் வெடித்தது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.இதனால் மைதானத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. முதலில் வன்முறையில் 127 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வன்முறையை தொடர்ந்து இந்தோனேசியாவில் ஒருவாரத்துக்கு கால்பந்து போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வன்முறை குறித்து உடனடி விசாரணை நடத்த இந்தோனேசிய அதிபர் ஜோகோ உத்தரவிட்டுள்ளார்.
38,000 பேர் அமரும் மைதானத்தில் 42,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கிழக்கு ஜாவா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரத்தில் 178 பேர் பலியானது இந்தோனேசியாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.