டொனால்டு ட்ரம்ப் வெற்றியை எச்சரிக்கையுடன் அணுகும் சீனா

டொனால்டு ட்ரம்ப் வெற்றியை எச்சரிக்கையுடன் அணுகும் சீனா
Updated on
1 min read

அமெரிக்கர்களின் பணிகளை சீனா கொண்டு சென்று விடுகிறது என்று கடுமையாக சீன வெறுப்பை காட்டி வந்த டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராவது உறுதியாகிவிட்ட நிலையில், சீனா இதனை எச்சரிக்கையுடன் அணுகியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் செய்தியாளர்களிடையே இன்று பெய்ஜிங்கில் தெரிவிக்கும் போது, “நாங்களும் அமெரிக்க தேர்தலை உன்னிப்பாக பின் தொடர்ந்து கவனித்து வருகிறோம். புதிய அமெரிக்க அரசுடன் இணைந்து பணியாற்றி இரு தரப்பு மக்களுக்கும் பயன் விளைவிக்கும் உறுதியான இருதரப்பு உறவுகளை வளர்த்தெடுப்போம்.

இருநாட்டு உறவுகளின் உறுதியான வளர்ச்சி இருநாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிற்குமே முக்கியமானது என்பதை புதிய அமெரிக்க அரசு புரிந்து கொள்ளும் என்று கருதுகிறோம். எனவே காத்திருந்து பார்க்கும் அணுகுமுறை எங்களுடையது, இருதரப்பு உறவுகளில் பரஸ்பர பயன்களை நோக்கி செயல்படுவோம்” என்றார் லூ காங்.

சீனாவைப் பொறுத்தவரை டிரம்ப், ஹிலாரி இருவருமே தங்களுக்கு எதிரானவர்கள் என்றே கருதுகிறது. தென் சீன கடல் பகுதியில் ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறை சீனாவுக்கு எதிரான போக்கை கடைபிடிப்பதால் கிளிண்டனை விட டிரம்ப் மேல் என்று சீனாவின் அதிகாரபூர்வ அரசியல் வர்ணனைகள் பொதுக்கருத்து ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது

அதே வேளையில் சீனா நாணய மோசடி செய்கிறது என்றும் அந்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குள் வரும் மலிவான இறக்குமதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதும் சீன தரப்பில் எச்சரிக்கையுடனேயே அணுகப்படுகிறது.

அமெரிக்கா ‘மிகப்பெரிய பணித் திருட்டு’ காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும், சீனா, மெக்சிகோ, சிங்கப்பூர் ஆகியவை அமெரிக்காவின் வேலைகளை திருடிச் செல்கின்றன என்றும் டிரம்ப் பேசியது தற்போது சீனாவின் நினைவுக்கு வந்துள்ளது.

சீனா-அமெரிக்கா இடையேயான ரூ.600 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தில் சீனாவுக்கு பெரும்பங்கு லாபம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இருதரப்பு வர்த்தகத்தில் அதிகபட்சமாக வருவாயை ஈட்ட சீனா தங்கள் நாட்டு பண மதிப்பை மிகவும் குறைவாக வைத்துள்ளமையும் டிரம்ப் வார்த்தைகளில் ‘நாணய மோசடி’ என்பதாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

எனவே இச்சூழ்நிலையில் டிரம்ப் அதிபராவது குறித்து சீனாவுக்கு சற்றே உற்சாகம் குன்றியுள்ளதாகவே ஊடகச் செய்திகள் பிரதிபலிக்கின்றன. இந்திய-சீன வர்த்தகத்தினால் அமெரிக்க மக்களும் பெரிய அளவில் பயனடைந்துள்ளனர் என்று லூ காங் கூறியிருப்பது இந்தப் பின்னணியிலிருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in