

அமெரிக்காவில் விமான நிலையத்துக்கு இரு கத்திகளை எடுத்து வந்த சீக்கியர் மீதான வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சீக்கியர்களின் மத வழக்கப்படி கிர்பான் எனப்படும் கத்தியை அவர்கள் வைத்திருப்பது வழக்கமாகும். சீக்கியரான மணீந்தர் சிங் நியூயார்க் விமான நிலையத்துக்கு இரு கிர்பான்களுடன் வந்தார். பாதுகாப்பு சோதனையின்போது அவரிடம் இருந்து கத்திகளை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்தனர்.
அமெரிக்காவில் பொது இடத்தில் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தால் 15 நாள் வரை சிறையும், 300 டாலர் அபராதமும் விதிக்கப்படும்.
மணீந்தர் சிங் மீதான வழக்கு அமெரிக்க குற்ற வழக்கு நீதி மன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 அங்குலம் அளவுக்கு மேல் கூர்மையான பகுதியுள்ள ஆயுதங்களை பொது இடத்துக்கு எடுத்து வருவது அமெரிக்க சட்டப்படி தவறு என்று போலீஸ் தரப்பில் வாதாடப்பட்டது. அதே நேரத்தில் சீக்கியர்கள் மத நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் குறித்து மணீந்தர் சிங் சார்பில் வழக்கறிஞர் குர்ஜாட் கவுர் வாதிட் டார். சீக்கியர்கள் தங்கள் கத்தியை எப்போதுமே வன்முறைக்கு பயன் படுத்தியது இல்லை.
கத்திகளை வைத்திருப்பதில் பலருக்கும் அமெரிக்காவில் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1987-ல் இதுபோன்ற ஒரு வழக்கில் சீக்கியருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் கவுர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மணீந்தர் சிங் மீதான குற்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சீக்கியர்கள் தங்கள் மத நம்பிக்கையை காத்துக்கொள்ளலாம் என்றும் நீதி மன்றம் கூறியுள்ளது.