Published : 27 Sep 2022 03:49 PM
Last Updated : 27 Sep 2022 03:49 PM

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே உடலுக்கு பிரமதர் மோடி மலரஞ்சலி

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் மறைவை அடுத்து, இன்று நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்று, அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி செலுத்தினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஷின்ஷோ அபே: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி நரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்து, சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றவரான அவரது திடீர் மறைவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஷின்ஷோ அபே இறுதிச் சடங்கு: இதையடுத்து, அவரது இறுதிச் சடங்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோி அல்பனிஸ் உள்பட 20 நாடுகளின் தலைவர்களும், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

டோக்கியோவின் மையப் பகுதியில் உள்ள புடோகன் என்ற இடத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தில் வெள்ளை நிற மலர் கொத்தை வைத்தும், ஜப்பான் வழக்கப்படி உடலோடு தலையை சாய்த்தும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். கடந்த 50 ஆண்டு கால ஜப்பான் வரலாற்றில் மறைந்த தலைவருக்கு அரசு முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது இதுவே முதல்முறை. ஷின்ஷோ அபேவுக்கு 19 சுற்று குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு: முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், ஷின்ஷோ அபே இந்தியாவுக்கு நெருங்கிய நண்பராக விளங்கியதை சுட்டிக்காட்டி, அவரது மறைவால் இந்தியா மிகுந்த துயரமடைந்ததாகத் தெரிவித்தார். ஜப்பான் பிரதமராக ஷின்ஷோ அபே, இந்திய - ஜப்பான் உறவை மிகப் பெரிய உயரத்துக்குக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்ட நரேந்திர மோடி, கிஷிடோவின் தலைமையும் இரு தரப்பு உறவை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

ஜப்பான் பிரதமர் கிஷிடோவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

பின்னர் இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமருடனான சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்ததாகவும், இரு தரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x