Published : 27 Sep 2022 10:31 AM
Last Updated : 27 Sep 2022 10:31 AM

இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே எங்களின் முக்கிய நட்பு நாடுகள் - ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் | கோப்புப்படம்

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் முக்கியத்துவம் வாய்ந்த தங்களின் நட்பு நாடுகள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள எஃப்-16 ராணுவ உதவியின் பின்னணி குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் அமெரிக்கா இதனைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறுகையில், "இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடனான எங்களது உறவுகளை நாங்கள் இணைத்துப்பார்க்க விரும்பவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு முக்கியமான புள்ளிகளில் எங்களுடைய நட்பு நாடுகளாகும். இரு நாடுகளுடனும் நட்பின் அடிப்படையில் வளங்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொள்கிறோம். இந்தியாவுடனான எங்களின் உறவு தனித்துவமானது. பாகிஸ்தானுடனான எங்களின் உறவும் தனித்துவமானது" என்று தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காகவே பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளாக அமெரிக்க அரசு கூறுவதை ஏற்கமுடியாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நியூர்யார்க்கில் தெரிவித்திருந்தார். அவரின் கருத்து வெளியான சிலமணி நேரங்களுக்குள் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஐநா பொதுச்சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள ஜெய்சங்கர், அங்கு அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே கலந்துரையாடல் நடத்தினார். அப்போது பேசிய அவர், "பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்க இருக்கும் ராணுவ உதவிக்கு கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எஃப்- 16 விமானம் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று அனைவருக்கும் தெரியும். இந்த மாதிரி காரணங்களைக்கூறி அனைவரையும் முட்டாளாக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, 450 அமெரிக்க டாலர் மதிப்பிலான நீடித்து வளர்ச்சி திட்டத்தின் கீழ், எஃப் 16 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புதல் அளித்திருந்தது. பாகிஸ்தானிற்கு ராணுவ உதவிகள் வழங்குவதை முந்தைய டிரம்ப் அரசு நிறுத்தி வைத்திருந்த நிலையில், அந்த முடிவினை தற்போதைய ஜோ பைடன் அரசு மாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x