

அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கு ஆடை வடிவமைக்க முடியாது என பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி தெலட் கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி தெலட் (52). அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உட்பட பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கு ஆடை வடிவமைக்குமாறு ஷோபியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இதனை ஷோபி தெலட் மறுத்துவிட்டார்.
மெலானியா ட்ரம்ப்புக்கு ஆடை வடிவமைக்க மறுத்ததற்கான காரணமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஷோபி பதிவிட்டிருப்பதாவது:
"ஒரு சுதந்திரமான ஆடை வடிவமைப்பாளருக்கு கருத்து சொல்ல அனைத்து உரிமையும் உண்டு. ஆடை வடிவமைப்பாளராக எனக்கான நியாயங்கள் உள்ளது. பணம் மட்டும் எங்களது நோக்கம் அல்ல. புலம்பெயர்ந்து வந்தவராக அமெரிக்காவில் என்னுடைய கனவுகள் தொடரும். அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்ததற்கு பெருமை கொள்கிறேன்.
மேலும் அமெரிக்காவின் அடுத்த முதல் பெண்மணியாக வரவுள்ள மெலானியா ட்ரம்ப்பின் கணவர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது இனவெறியை தூண்டும் விதமான பேச்சுகளில் ஈடுபட்டவர். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். எனவே மெலானியா ட்ரம்ப்புக்கு என்னால் ஆடை வடிவமைக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.