ஈரானில் 10 நாட்களாக தொடரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ‘உருமாற்றம்’ - பின்புலம் என்ன?

ஈரான் போராட்டத்தில்...
ஈரான் போராட்டத்தில்...
Updated on
1 min read

தெஹ்ரான்: ஈரானில் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார்.

மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது. அங்கு லட்சக்கணக்கான பெண்கள் துணிச்சல் மிகு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஈரானின் முக்கிய வீதிகளில் இளம் பெண்கள் பலரும், பெண்களின் வாழ்க்கையை விடுதலை செய்யுங்கள் என்று முழங்கி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர். 1000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இரவோடு இரவாக ஈரானின் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும், செயற்பாட்டாளர்களும், போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக ஓஸ்லோவில் செயல்படும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், நாட்டில் கலவரத்தை தூண்டுபவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள் என்று அதிபர் இம்ராஹிம் ரெய்சி உத்தரவிட்டிருக்கிறார்.

பத்து நாட்களுக்கு முன்னர் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டமாக தொடங்கிய ஈரான் மக்களின் போராட்டம் தற்போது இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டமாக மாறிருக்கிறது என்ற அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in