

தீவிரவாதத்தை ஒழிப்பதில் ட்ரம்ப் அளித்த வாக்குறுதிப்படி நடந்து கொண்டால், அவர் சிரியாவின் நண்பராக இருப்பார் என அந்நாட்டு அதிபர் பஷார் ஆசாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பஷார் ஆசாத் கூறும்போது, "எங்களுடைய அரசாங்கம் தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிட்டு வருகிறது.
எனவே அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் அளித்த வாக்குறுதிப்படி டொனால்டு ட்ரம்ப் நடந்து கொண்டால் அவர் சிரியாவின் நண்பராக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிரியாவில் பலமுனை உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத், டமாஸ்கஸை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள் அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன.
கடந்த சில வருடங்களாக சிரியாவில் நடந்து வரும் உள் நாட்டுப் போருக்கு இதுவரை 3 லட்சம்பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.