பாதுகாப்பும் கவனமும் அற்ற சிகிச்சையால் ஆண்டுக்கு 26 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம்

பாதுகாப்பும் கவனமும் அற்ற சிகிச்சையால் ஆண்டுக்கு 26 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம்
Updated on
1 min read

புதுடெல்லி: பாதுகாப்பும் கவனமும் அற்ற சிகிச்சையால் ஆண்டுக்கு 26 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை பாதுகாப்பானதாகவும், கவனத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனினும், உலகின் பல பகுதிகளில் இத்தகைய சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைப்பதில்லை என்பதை புள்ளி விவரத்துடன் தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம். குறிப்பாக, குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் பாதுகாப்பான, கவனத்துடன் கூடிய சிகிச்சை வழங்கப்படாததால் ஆண்டுதோறும் 26 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான தலைவர் பூணம் கேட்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற சிகிச்சை, கவனக்குறைவான சிகிச்சை என்பது பல காரணங்களால் நிகழ்வதாக தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பற்ற மருந்துகளை கொடுக்கும் முறை, தரமான மருத்துவ உள்கட்டமைப்பு இன்மை, பணியாளர் பற்றாக்குறை போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற மருந்துகளை கொடுக்கும் முறையை மாற்றவும், உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக பூணம் கேட்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, வயதான நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள் கொடுக்கப்படுவதை தடுக்கவும், விரைவான உயர் சிகிச்சை கிடைக்கவும், தரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவும் உலக சுகாதார நிறுவனம் பிராந்தியம் அளவில் கவனம் செலுத்தி வருவதாக பூணம் கேட்ரபால் சிங் கூறியுள்ளார்.

பாதுகாப்பான சிகிச்சைக்கும் கவனமான சிகிச்சைக்கும் கணினி வழி சிகிச்சையை அனைத்து நாடுகளும் பின்பற்ற உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளித்து வருவதாகவும் பூணம் கேட்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in