Published : 22 Sep 2022 01:49 PM
Last Updated : 22 Sep 2022 01:49 PM

ஐ.நா. கொள்கைகளை சிறிதும் வெட்கமின்றி ரஷ்யா மீறியுள்ளது: புதின் மீது பைடன் தாக்கு

ஜோ பைடன்

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் கொள்கைகளை சிறிதும் வெட்கமில்லாமல் ரஷ்யா மீறியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் பைடன் உரை நிகழ்த்தினார். இந்த உரையில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்தார். ஜோ பைடன் பேசும்போது, “ஒரு தனிப்பட்ட நபரால் ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற போர் இது. ரஷ்யாவை யாரும் அச்சுறுத்தவில்லை. ரஷ்யாதான் இந்த மோதலை நாடியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் கொள்கைகளை சிறிதும் வெட்கமில்லாமல் ரஷ்யா மீறியுள்ளது. ஐ.நா.வின் விதிமுறையை மீறி அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்துள்ளது. எல்லா இறையாண்மையும் கொண்ட நாடுகளைபோல உக்ரைனுக்கும் தங்கள் நாட்டை பாதுகாத்துக் கொள்ள எல்லா உரிமையும் கொண்டுள்ளது. உக்ரைனுடன் நாம் துணை நிற்போம்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். ரஷ்யா செய்த அட்டூழியங்களை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பள்ளிகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ஐரோப்பாவின் மீது அணு ஆயுத எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

ஒரு நாட்டை தங்கள் சுய விருப்பத்திற்காக யாரும் கைப்பற்றிட முடியாது. ரஷ்யா மீதான தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

மேலும், அவர் தனது உரையில், உக்ரைனுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய அளவிலான பாதுகாப்பு உதவி மற்றும் நேரடி பொருளாதார ஆதரவை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது. அதன் விவரம் > அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் - அதிபர் விளாடிமிர் புதின் கடும் எச்சரிக்கை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x