Published : 22 Sep 2022 08:29 AM
Last Updated : 22 Sep 2022 08:29 AM

கனடாவில் 3 குழந்தைகளுக்கு பார்வை முழுவதும் பறிபோவதற்குள் பசுமையான நினைவுகளை வழங்க உலகை சுற்றும் தம்பதி

டொரண்டோ: கனடாவின் கியூபெக் நகரைச் சேர்ந்தவர் செபாஸ்டியன் பெல்லட்டியர். இவரது மனைவி எடித் லேமே. இவர்களுக்கு மியா, காலின், லாரண்ட், லியோ என 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்த 4 குழந்தைகளில் 3 பேருக்கு ரெட்டினிட்டிஸ் பிக்மென்டோ என்ற விநோத நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதித்தவர்கள் மெல்ல மெல்ல கண் பார்வையை இழந்துவிடுவர்.

இவர்களின் 12, 7, 5 வயது குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பார்வைத் திறன் முற்றிலும் பறிபோகும் முன்னர் உலகத்தைச் சுற்றிப் பார்க்க செபாஸ்டியன் குடும்பம் கிளம்பியுள்ளது. தங்களது பார்வையை குழந்தைகள் இழப்பதற்கு முன்னதாக உலகில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்க்க இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து செபாஸ்டியன் கூறியதாவது: எங்கள் 3 பேருக்கு இந்த நோய் ஏற்பட்டதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதையடுத்தே நாங்கள் உலகைச் சுற்றிப் பார்க்க கிளம்பியுள்ளோம்.

அவர்கள் பார்வையை இழப்பதற்கு முன்னர் உலகில் உள்ள அனைத்து உன்னத விஷயங்களையும், சுற்றுலாத் தலங்களையும், இயற்கைக் காட்சிகளையும் கண்டு ரசிக்க நான் முடிவு செய்தேன். பல்வேறு நாட்டு கலாச்சாரங்கள் மற்றும் மக்களைக் காண முடிவு செய்தோம்.

அடுத்த 6 மாதத்தில் உலகின் பல்வேறு இடங்களுக்கு நாங்கள் செல்லவுள்ளோம். 2021-ம் ஆண்டில் நாங்கள் கிழக்கு கனடா பகுதியைச் சுற்றிப் பார்த்தோம். பின்னர் கடந்த மார்ச்சில் நமீபியா பயணத்தைத் தொடங்கினோம். இதைத் தொடர்ந்து மங்கோலியா முதல் இந்தோனேஷியா வரை சென்றோம்.

அவ்வப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எங்கள் பயணம் குறித்த புகைப்படங்களை பதிவுசெய்கிறோம். குதிரை, ஒட்டகச் சவாரியை எங்கள் குழந்தைகள் மிகவும்விரும்பினர். பிற்காலத்தில் அவர்களது பார்வை பறிபோனாலும் அவர்கள் உலகைச் சுற்றிய நினைவுகள் படம் போல அவர்கள் மனதில் நிற்கும். அவர்களது திருப்திதான் எங்களது மகிழ்ச்சி. எங்களுக்கு அது போதும்” என்றார்.

குழந்தைகள் விநோத நோயால் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் நினைவில் பசுமையான நினைவுகளை இடம்பெறச் செய்ய விரும்பிய இந்த பெற்றோர் பாராட்டத்தக்கவர்கள் என்று சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x