Published : 22 Sep 2022 03:55 AM
Last Updated : 22 Sep 2022 03:55 AM

அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் - அதிபர் விளாடிமிர் புதின் கடும் எச்சரிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விரும்பியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி, தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் ரஷ்ய-உக்ரைன் போரால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பணவீக்கம் ஏற்பட்டு, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளை மீட்க, அந்நாட்டு ராணுவத்துக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி, உதவி வருகின்றன.

இந்த நவீன ஆயுதங்கள் மூலம் ரஷ்யப் படைகள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி, இழந்த பகுதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அளித்து போரைத் தூண்டுவது ரஷ்ய அதிபர் புதினுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை எதிர் கொள்ள, ரஷ்யாவில் உள்ள 20 லட்சம் ராணுவ வீரர்களில், ஒரு பகுதியினரை தீவிரப் போருக்குத் தயாராக இருக்குமாறு அவர் நேற்று உத்தரவிட்டார்.

ரஷ்யாவில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைத் திரட்ட உத்தரவிட்டிருப்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. மேலும், உக்ரைனின் சில பகுதி களை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க விரும்புகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரில் ஈடுபடப்போவதாக அவை மிரட்டுகின்றன. அந்த நாடுகள் உக்ரைனில் அமைதியை விரும்பவில்லை.

ரஷ்யாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், உக்ரைனை ஊக்குவிக்கின்றன. ரஷ்யாவுக்கு எதிரான கொள்கையில், மேற்கத்திய நாடுகள் எல்லைகள் அனைத்தையும் மீறிவிட்டன. எனவே, ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயார். இது பொய் மிரட்டல் அல்ல. அணு ஆயுதங்களுடன் எங்களை மிரட்ட முயற்சிப்பவர்கள், பதிலுக்கு அவர்களை நோக்கி அணு ஆயுதங்கள் திரும்பும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

நேட்டோ படையுடன் மோதல்?

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருடன், ரஷ்யா நேரடியாக மோதுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளது. இது மூன்றாம் உலகப் போருக்கும் வழிவகுக்கும் நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதினின் தொலைக்காட்சி உரைக்குப் பின்னர் பேட்டியளித்த, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே சோய்கு, "ரஷ்யாவில் கூடுதலாக 3 லட்சம் வீரர்கள் போருக்குத் திரட்டப்படுவர்" என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாஜிப் படைகளை எதிர்த்துப் போரிட மிக அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை போருக்குத் திரட்ட உத்தரவிடப்பட்டது. அது போன்ற நடவடிக்கை ரஷ்யாவில் நேற்று தொடங்கியது.

உக்ரைனின் டோன்ஸ்க், லுகான்ஸ்க், ஜபோரிஷ்ஷியா மற்றும் கெர்சன் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளனர்.

ஊடுருவலுக்கு முன்பே இப்பகுதிகளை தனிப்பட்ட பகுதிகளாக ரஷ்ய அதிபர் புதின் அங்கீகரித்தார். இப்பகுதிகள் உட்பட உக்ரைன் நாட்டின் 15 சதவீத பகுதிகளை, அதாவது ஹங்கேரி அளவுக்கு ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கும் அதிபர் புதின் ஒப்புதல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த திட்டத்தை சட்டவிரோதம் என்று மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் விமர்சித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x