ஹிலாரியை காப்பது தில்லுமுல்லு அமைப்பு முறையே: டிரம்ப்

ஹிலாரியை காப்பது தில்லுமுல்லு அமைப்பு முறையே: டிரம்ப்
Updated on
1 min read

ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி தில்லுமுல்லு அமைப்பு முறையால் பாதுகாக்கப்படுகிறார் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதனை ஒட்டி குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மிச்சிகனில் நடைபெற்ற பிரச்சாரத்தில் டிரம்ப் பேசும்போது, "எட்டு நாட்களில் எஃபிஐ-யால் ஹிலாரியின் 6,50,000 இ-மெயில்களை ஆய்வு செய்திருக்க முடியுமா? ஹிலாரி தில்லுமுல்லு அமைப்பு முறையால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறார்" என்றார்.

முன்னதாக ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இ-மெயில்களை ஹிலாரி நீக்கினார் என டிரம்ப் தொடர்ந்து தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க எஃப்பிஐ அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். இது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு எஃபிஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமி அனுப்பிய கடிதத்தில், "ஹிலாரி குற்றம் புரிந்தார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. எஃப்பிஐ-யின் இந்த முடிவில் மாற்றம் இல்லை" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வேலை வாய்ப்புகளை மீட்டெடுப்போம்

தொடர்ந்து மிச்சிகனில் பேசிய டிரம்ப், "அமெரிக்காவின் வேலை வாய்ப்பை இந்த அரசியல்வாதிகள் பிற நாடுகளுக்கு அளித்து விட்டனர். ஏனென்றால் நமது அரசியல்வாதிகள் முட்டாள்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அமெரிக்காவுக்கு வர வேண்டிய பல நிறுவனங்கள் நமது அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறையால் பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இனி நாம் இதற்கு அனுமதிக்கக் கூடாது. நமது வேலை வாய்ப்புகளை நாம் மீட்டெடுக்க போகிறோம்" என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in