Published : 20 Jul 2014 08:49 AM
Last Updated : 20 Jul 2014 08:49 AM

விமானம் விழுந்த இடத்தில் தடயங்களை அழிக்க முயற்சி: ரஷ்யா மீது உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டு

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய குழுவினர்தான். அதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. விமானம் விழுந்த இடத்தில் தடயங்களை அழிக்க ரஷ்யா ஆதரவு குழுவினர் முயற்சிக்கின்றனர் என்று உக்ரைன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்ய அரசு, விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்தான். அந்த உண்மையை மறைக்க ரஷ்யா மீது அபாண்டமாக பழிசுமத்துகிறது என்று தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து உக்ரைன் உளவுத் துறை தலைவர் விடாலி நாடா நிருபர்களிடம் சனிக்கிழமை கூறும்போது, ‘‘மலேசிய விமானத்தை ஏவுகணை மூலம் கிளர்ச்சி யாளர்கள் சுட்டு வீழ்த்தியுள் ளனர். ஆனால் விமா னத்தை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு கிளர்ச்சியாளர் களுக்கு பயிற்சி கிடையாது. தொழில்நுட்பத் திறன் வாய்ந்த ரஷ்ய குழுவினர்தான் ஏவு கணையை செலுத்தி விமா னத்தை வீழ்த்தியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றை தொகுத்து வருகிறோம். விபத்து நடந்த இடத்தில் தடயங்களை அழிக்க ரஷ்யா ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்’’ என்றார்.

ரஷ்யா திட்டவட்ட மறுப்பு

ரஷ்ய அரசு சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மலேசிய விமானம் உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உக்ரைன் ராணுவ முகாம்கள் அதிகம் உள்ளன. அந்த முகாம்களில் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ‘பக் எம்-1’ ஏவுகணைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் டோன்ஸ்டக் பகுதியில் 156-வது விமான எதிர்ப்பு ஏவுகணை படைப்பிரிவு உள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் பறக்கும் விமானங்களை குறிதவறாமல் சுட்டு வீழ்த்தும் திறன் உக்ரைன் ராணுவத்துக்கு உள்ளது. உள்நாட்டுப் போர் நடைபெறும் அப் பகுதியில் ஏவுகணைகளை இதுவரை பயன்படுத்தியதே இல்லை என்று உக்ரைன் ராணுவம் கூறுவது முரண்பாடாக உள்ளது.

2001-ம் ஆண்டில் இதே பகுதியில் பறந்த ரஷ்ய பயணிகள் விமானத்தை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தி 78 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

மலேசிய விமானம் பறந்த இடம் ரஷ்ய எல்லைக்கு வெகுதொலைவில் உள்ளது. எங்கள் விமான பாதுகாப்பு எல்லை கட்டுப்பாட்டுக்குள் மலேசிய விமானம் வரவே இல்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக சர்வதேச சமூகம் நடுநிலையுடன் விசாரணை நடத்த வேண்டும். ஆரம்பகட்ட விசாரணைகூட நடைபெறாத நிலையில் ரஷ்யா மீது பழிசுமத்துவது அபாண்டமானது.

இவ்வாறு ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

மலேசியா கோரிக்கை

மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் லியோவ் டினாங் லாய், கோலாலம்பூரில் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் பாதுகாப்பான வழித்தடத்தில் சுமார் 33,000 அடி உயரத்தில் பறந்துள்ளது. எங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை.

சம்பவ இடத்தில் தடயங்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மலேசிய நிபுணர் குழு உக்ரைனின் கீவ் நகருக்கு சென்றுள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து உண்மையை வெளிகொண்டு வருவோம்.

இவ்வாறு அமைச்சர் லியோவ் கூறினார்.

ஐ.நா. சபை விசாரணை

இந்த விவகாரம் தொடர் பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தொலைபேசியில் பேசினார்.

அப்போது ஐ.நா. சபை யின் சர்வதேச விமானப் போக்கு வரத்து அமைப்பு தன்னிச்சையான விசாரணை நடத்த உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி ஐ.நா. சபையின் நிபுணர் குழு விரைவில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களிடம் வேண்டுகோள்

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்துக்குள் செல்லவிடாமல் கிளர்ச் சியாளர்கள் தடுப்பதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை கிளர்ச் சியாளர்கள் மறுத்துள்ளனர்.

இதனிடையே ரஷ்ய வெளியுறவுத் துறை விடுத்துள்ள வேண்டுகோளில், சர்வதேச விசாரணைக்கு உக்ரைன் அரசும் கிளர்ச்சி யாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x