Published : 20 Sep 2022 05:08 AM
Last Updated : 20 Sep 2022 05:08 AM

இங்கிலாந்து ராணியின் இதுவரை பார்த்திராத புகைப்படம் - அரச குடும்பம் வெளியிட்டது

கடந்த 8-ம் தேதி மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ராணியின் உடலுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் கூடி நின்று இறுதி அஞ்சலியை செலுத்தினர். படம்: ஏஎப்பி

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக, மக்கள் பார்வைக்கு இதுவரை வெளியிடப்படாத அவரது புகைப்படம் ஒன்றை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த 8-ம் தேதி காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடலுக்கு நேற்று இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதில் அரச குடும்பத்தினர், உலகத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் ராணியின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக, இதுவரை வெளியிடப்படாத அவரது புகைப்படம் ஒன்றை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

70 ஆண்டு நிறைவு

இரண்டாம் எலிசபெத் ஆட்சிப் பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இந்த ஆண்டு பிளாட்டினம் விழா கொண்டாடப்பட்டது. அப்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இதனை வின்ட்சர் கேஸ்டில் என்ற புகைப்படக்காரர் கடந்த மே மாதம் எடுத்தார். இந்தப் புகைப்படத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் கழுத்தில் முத்து மாலை மற்றும் காதணிகளுடன் நீல நிற ஆடையில் காணப்படுகிறார்.

இதற்கான படவிளக்கத்தில், “மகாராணியின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக ஒரு புதிய புகைப்படம் வெளியிடப்படுகிறது. 70 ஆண்டுகள் மைல் கல்லை எட்டிய முதல் பிரிட்டிஷ் மன்னர் என்ற பெருமையை பெற்றதால் இந்த ஆண்டு அவருக்கு பிளாட்டினம் விழா எடுக்கப்பட்டது. அப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. நாளை லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடி அவரது அற்புதமான வாழ்க்கையை நினைவு கூர்வார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் ராணி எலிசபெத் அணிந்துள்ள அணிகலன்களை அவரது தந்தை மன்னர் ஆறாம் ஜார்ஜ் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பரிசாக வழங்கியதாக பிரிட்டனின் பிரபல நாளிதழ் ‘டெய்லி மெயில்’ கூறுகிறது.

ராணி உடலுடன் புதைக்கப்படும் நகைகள்

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடலுடன் அவருக்கு விருப்பமான நகைகள் புதைக்கப்படவுள்ளன. நகைகள் மீது அதிக விருப்பம் கொண்டவர் ராணி 2-ம் எலிசபெத். தனது வாழ்நாளில் ஏராளமான நகைகளையும், வித்தியாசமான நகைகளையும் தனது அரண்மனையில் வாங்கிக் குவித்திருந்தார் அவர். மேலும் அரச குடும்பத்துக்கே உரிய நகைகளையும் அவர் தொடர்ந்து அணிவார். அரண்மனைகளில் நடக்கும் நிகழ்ச்சிகள், ராஜ குடும்ப நிகழ்ச்சிகள், வெளியே நடைபெறும் விழாக்களில் அணிவதற்காக என பல்வேறு நகைகளை அவர் வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் கைகளில் உள்ள அனைத்து விரல்களில் அணியும் மோதிரங்கள், பிரேஸ்லெட்டுகள், இடுப்பில் அணியும் நகை, கழுத்தில் அணியும் நெக்லஸுடன் அவர் புதைக்கப்படுவார் எனத் தெரியவந்துள்ளது. இந்த நகைகளை அவர் எப்போதும் விரும்பி அணிவார் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே, ராணி எலிசபெத்தின் சில நகைகள், அவரது மகளும், இளவரசியுமான ஆனிக்கு வழங்கப்படும் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x