

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக 500, 1,000 ரூபாய் நோட்டுகளை இந்தியா வாபஸ் பெற்றது மிகுந்த துணிச்சலான முடிவாகும். அதேசமயம் ஊழலுக்கு எதிராக இந்நடவடிக்கை மட்டும் போதாது என சீன நாளிதழ் கருத்து வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல், கறுப்புப் பணத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு மாற்றாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
பிரதமரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும், வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் இந்தியாவின் இந்த முடிவு மிகவும் துணிச்சலானது என வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:
கறுப்புப் பணம் மற்றும் ஊழலை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத் தில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மோடி திரும்ப பெற்றுள்ளார். அவர் நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார். சட்டவிரோதமாக நடக்கும் பெரும்பாலான வர்த்தகங்களில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 80 சதவீதம் வரை ரொக்கமாக புழங்குகின்றன. அதைத் தடுக்கவே அவர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். இது மிகவும் துணிச்சலான, தீர்க்கமான முடிவு. ஆபத்தும் அதிகம் தான்.
அதே சமயம் கறுப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்த நடவடிக்கை மட்டும் போதாது. மேலும் பல முக்கியமான சீர்த்திருத்தங்கள் அவசியம் தேவை. இந்த விவகாரத்தில் சீனாவிடம் இருந்து இந்தியா யோசனை கேட்டு செயல்படுத்த வேண்டும். சீன அதிபர் ஜி ஜின்பிங் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்தவர். இதனால் பல்வேறு நிலைகளில் உள்ள லட்சக்கணக்கான அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.