உலக மசாலா: தொழில்நுட்பத்துக்குச் சவால் விட்டவர்!

உலக மசாலா: தொழில்நுட்பத்துக்குச் சவால் விட்டவர்!
Updated on
1 min read

ஜெர்மனியின் கொலோன் நகரில் குளிர்பானங்களை விற்பனை செய்து வந்தார் 37 வயது வியாபாரி ஒருவர்.

தானியங்கி இயந்திரத்தில் பணத்தைச் செலுத்தினால், குளிர்பான பாட்டில் வெளியே வரும். குடித்த பிறகு பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக அதே இயந்திரத்தில் போட்டுவிட வேண்டும். ஒரு ரசீதும் அந்த பாட்டிலுக்கான பணமும் வெளியே வரும். இந்த இயந்திரத்தில் சில விஷயங்களை மாற்றி அமைத்தார் வியாபாரி. காலியான பாட்டிலை உள்ளே நுழைத்தால், அது இன்னொரு வழியில் வெளியே வந்து விழுந்தது. ஆனால் காலி பாட்டிலுக்கான ரசீதும் பணமும் கிடைத்தன.

இப்படிச் செய்த பிறகு, தினமும் காலி பாட்டிலைப் போட்டுப் பணத்தை எடுக்க ஆரம்பித்தார். 1,77,451 தடவைகள் ஒரே பாட்டிலை இயந்திரத்துக்குள் செலுத்தி, 32,12,000 ரூபாய் பெற்றிருக்கிறார். மறுசுழற்சி செய்யும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம், மிகவும் தாமதமாகத்தான் இந்த மோசடியைக் கண்டுபிடித்தது.

குளிர்பான பாட்டில்களின் விற்பனையை விட மிக மிக அதிக அளவில் காலி பாட்டில்கள் போடப்பட்டுள்ளதைக் கண்டு, விசாரணையை மேற்கொண்டது. வியாபாரி மீது வழக்கும் தொடுத்தது. வியாபாரிக்காக வாதாடிய வழக்கறிஞர், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறுவது எப்படி என்று பரிசோதிப்பதற்கே தன் கட்சிக்காரர் இந்தக் காரியத்தைச் செய்திருப்பதாகச் சொன்னார். இறுதியில் மோசடி குற்றத்துக்காக வியாபாரிக்கு, 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்பத்துக்குச் சவால் விட்டிருக்கிறாரே இந்த மனிதர்!

மேற்கத்திய நாடுகளில் தண்ணீர்ப் புகாத ஸ்மார்ட்போன்கள் இன்று சர்வசாதாரணமாகி விட்டன. ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளாகவே தண்ணீர்ப் புகாத போன்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜப்பானில் புழங்கும் 90 முதல் 95 சதவீத போன்கள் தண்ணீர்ப் புகாதவை. ஏனென்றால் மக்கள் குளிக்கும்போதும் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பே ஜப்பானியர்கள் போன்களுக்கு அடிமையாகிவிட்டனர். அவர்களால் குளிக்கும் நேரம்கூட போன்களை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. அதை உணர்ந்த நிறுவனங்கள், தண்ணீர்ப் புகாத போன்களை ஜப்பானில் அறிமுகம் செய்தனர்.

உலகின் முதல் தண்ணீர்ப் புகாத போன் Casio Canu 502S, 2005-ம் ஆண்டு வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஜப்பானிய சந்தையைக் குறிவைத்து, பல நிறுவனங்களும் தண்ணீர்ப் புகாத போன்களைக் கொண்டு வந்தனர்.

‘இன்று சாதாரண ஸ்மார்ட்போன்களை ஜப்பானில் விற்பனை செய்வது சாத்தியமே இல்லை. ஜப்பானிய இளம் பெண்கள் குளித்துக்கொண்டே போனில் பேசுகிறார்கள். மெயில்களைப் பார்க்கிறார்கள். குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். 24 மணி நேரமும் ஸ்மார்ட் போன்களுடன் வாழ்க்கை நடத்துபவர்கள், தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து, காய வைத்தும் பயன்படுத்துகிறார்கள். தண்ணீர்ப் புகாத போன்களைப் பயன்படுத்துவதால் மழையில் நனையும்போது பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்கிறார் ஃபுஜிட்சு நிறுவனத்தின் துணைத் தலைவர்.

தொழில்நுட்ப அடிமைகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in