

சிரியாவில் கிளர்ச்சியாளர் வசமிருந்த அலெப்போ நகரின் வட கிழக்குப் பகுதிகள் சிரிய அரசுப் படை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
சிரியாவின் அலெப்போ நகரில் சிரிய அரசுப் படைகள் தொடர் முன்னேற்றத்தால் கிளர்ச்சியாளர்களது கட்டுப்பாட்டிலிருந்து அலெப்போ நகரின் வடகிழக்குப் பகுதிகள் அரசுப் படைகள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட செய்தியில், "கிழக்கு அலெப்போ நகரின் அருகேவுள்ள பகுதிகளை சிரிய கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து இழந்து விட்டனர். கடந்த 2012-ம் ஆண்டிற்கு பிறகு சிரிய கிளர்ச்சியாளர்கள் அடைந்த மிகப் பெரிய தோல்வியாக இது கருதப்படுகிறது" என்று கூறியுள்ளது
அலெப்போ நகரின் கிழக்குப் பகுதிக்கு இரு வாரங்களுக்கு முன்பே சிரிய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை நோக்கி அரசுப் படைகள் முன்னேறிச் செல்ல ஆரம்பித்துவிட்டதால் அப்பகுதிகளிலிருந்த நூற்றுக்கணக்கானக் குடும்பத்தினர் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கும், குர்திஷ் இனத்தவரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் வாகனங்கள் மூலமோ, நடைப் பயணமாகவோ இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மேலும் அரசுப்படைகள் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.