

மறைந்த கியூப தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகப் புரட்சியாளர்கள் அனைவருக்கும் ஓர் அறைகூவல். காஸ்ட்ரோவின் மரபை பின்பற்றுவோம். அவரது சுதந்திர, சோஷலிஸ கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்போம்" என்று கூறியுள்ளார்.
ஈகுவேடார் நாட்டு அதிபர் ரஃபேல் கோரியா தனது இரங்கல் ட்வீட்டில், "அவர் மிகப் பெரியவர். அப்பேற்பட்ட ஃபிடல் மறைந்துவிட்டார். வாழ்க கியூபா. வாழ்க லத்தீன் அமெரிக்கா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, "கியூபா புரட்சியின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டரில் இவ்வாறான இரங்கல் குவிந்த வரும் நிலையில், முன்னாள் சோவியத் தலைவர் மிகயில் கோர்பசேவ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "அமெரிக்காவின் அத்தனை நெருக்கடிகளுக்கும் இடையே ஃபிடல் காஸ்ட்ரோ துணிச்சலுடன் தனது நாட்டை வலுவாக்கினார். கியூபாவை சுதந்திரமான வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றார்" எனத் தெரிவித்துள்ளார். இதனை இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.