Published : 17 Sep 2022 09:11 AM
Last Updated : 17 Sep 2022 09:11 AM

ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அசார் ஆப்கனில் இருக்கிறார்: பிலாவல் பூட்டோ ஜர்தாரி

சமர்கண்ட்: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார், ஆப்கனிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

பிலாவல் பூட்டோ ஜர்தாரி பேட்டி:

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது இதனைத் தெரிவித்தார். எனவே, மசூத் அசார் விவகாரம் இனி இந்தியா - பாகிஸ்தான் இடையேயானது மட்டுமல்ல, ஆப்கனிஸ்தானையும் சேர்த்து மூன்று நாடுகள் தொடர்புடைய விவகாரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாலிபான்கள் மறுப்பு:

முன்னதாக, மசூத் அசார் ஆப்கனிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் ஏதோ ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து, கைது செய்து தகவல் தெரிவிக்குமாறு ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு பக்க கடிதத்தை எழுதியாக கடந்த செவ்வாய் கிழமை பாகிஸ்தான் நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து, இது குறித்து கடந்த புதன் கிழமை பதில் அளித்த தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், அந்த செய்தியை முழுமையாக மறுப்பதாகத் தெரிவித்தார். பாகிஸ்தான் தரப்பில் இருந்து அதுபோன்ற கடிதம் அனுப்பப்படவில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் ஆப்கானிஸ்தானில் இல்லை என்றும், அந்த அமைப்பு பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் அந்த நாட்டில்தான் செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்ட ஜபிஹூல்லா முஜாஹித், யாரும் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக செயல்படுவதற்கு ஆப்கனிஸ்தான் மண்ணைப் பயன்படுத்த தாங்கள் அனுமதிப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் பின்னணி:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு, கடந்த 2019ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்த அமைப்பை, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளும் ஐநா, பிரிக்ஸ் ஆகிய சர்வதேச அமைப்புகளும் தடை செய்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x