

பாகிஸ்தான் அரசியலமைப்பு இந்தியாவுடன் இயல்பான உறவு வைத்துக் கொள்ளும் நிலையில் இல்லை என்று முன்னாள் வெளியுறவுச் செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத நாடுகளான இந்தியா பாகிஸ்தான் ஆகியவற்றிற்கிடையேயான பகைமை ‘நிர்வகிக்கப்பட்ட பகைமை’ என்கிறார் சிவசங்கர் மேனன்.
நியூயார்க் பலகலைக் கழகத்தின் தெற்காசிய மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு விவாதத்தின் போது சிவசங்கர் மேனன் கூறுகையில், “இன்றைய அளவில் கூற வேண்டுமெனில் இந்திய-பாகிஸ்தான் பகைமை ஒரு நிர்வகிக்கப்பட்ட பகைமை என்றே அறுதியிடுகிறேன்.
இன்றைய நிலையில் பாகிஸ்தான் அரசியலமைப்பு அது சார்ந்த நிறுவனங்கள், குடிமைச் சமூகம் என்று எதுவும் இந்தியாவுடன் இயல்பான உறவை வைத்துக் கொள்ளும் திறனில் இல்லை. நிறுவனமயமான ஒரு வலுவான நலன் அங்கு செயல்பட்டு வருகிறது.
ஆனால் அதே போன்று இந்தியாவில் கட்சி அரசியல் விவகாரமாக மாறினால் இங்கும் அதே செயல்பாடுகளே இருக்கும் ஆனால் இங்கு அம்மாதிரி இல்லை.
காஷ்மீரைச் சுற்றி நீண்ட காலமாக எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு எங்களுக்கு தீர்வு தெரியும் ஆனால் அவை அரசியல் ரீதியாக செயலாற்றுவது மிக மிக கடினம்.
மேலும் மும்பை தாக்குதலுக்குப் பிறகே பாகிஸ்தானுடன் இருந்து வரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில் பொதுமக்கள் ஆதரவு இல்லை. மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் தொடர்ந்து வருவதால் இதற்கெல்லாம் அவசரமான தீர்வுகள் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றே கூறுவேன். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராவது பற்றி இந்தியா கவலைப்படக்கூடாது.
என்னைப் பொறுத்தவரை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் என்பது மாற்றத்தை கொண்டு வராது. அது அழகிப்போட்டி, அழகிப்போட்டியில் வெற்றி பெற விரும்புகிறீர்களா சென்று மகிழுங்கள். இது விஷயமல்ல. அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றும் சூழ்நிலைகளை உருவாக்குவதுதான் முக்கியம். இதுவே அமெரிக்க நலனும் கூட” என்றார்.