Published : 15 Sep 2022 05:40 PM
Last Updated : 15 Sep 2022 05:40 PM

ராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்வும், கேமரா கண்களால் கொத்தப்படும் மேகன் மார்கலும்

ராணியின் உடலுக்கு மரியாதை செலுத்தும் ஹாரி - மேகன்

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து அடுத்தடுத்த நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பிரிட்டன் மக்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சார்லஸ் - டயனா தம்பதியின் இரண்டாவது மகனான ஹாரியின் மனைவி மேகன் மார்கலின் இருப்பு, ஊடக வெளிச்சத்தால் சூழப்பட்டுள்ளது.

மேகன் எவ்வாறு நடக்கிறார், அவரது முக பாவனைகள் எவ்வாறு உள்ளது, அவர் தன் கைகளை பொதுவெளியில் எவ்வாறு குலுக்குகிறார் என அவரின் ஒவ்வொரு அசைவும் உற்று நோக்கப்படுகிறது. காரணம், மேகன் ஒரு கருப்பினப் பெண். ஹாரியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு விவகாரத்து பெற்றவர். இந்தக் காரணங்களால் மேகனை எப்போது பதற்றங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. ராணியின் இறுதி நிகழ்வுகளிலும் அதுவே பிரதிப்பலித்துக் கொண்டிருக்கிறது.

ராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்காக கணவர் ஹாரியுடன் இங்கிலாந்து வந்துள்ள மேகன் மார்கல் அரண்மனைக்கு வெளியே கூடியிருந்த பொதுமக்களுடன் அன்பாகவும், பணிவாகவும் கலந்துரையாடினர். அப்போதுதான் அந்த விரும்பத்தகாத நிகழ்வு நடந்தது. மேகன் தடுப்பு வேலியில் வரிசையாக நின்றுக் கொண்டிருந்த மக்களுடன் கைக்குலுக்கினார். அப்போது அங்கு நின்றிருந்த பிரிட்டிஷ் பெண் ஒருவர், மேகனுக்கு கைக்குலுக்க மறுத்துவிட்டார். அந்தப் பெண்ணை மேகன் நொடியில் கடந்துவிட்டார். ஆனாலும், இக்காட்சி பிரிட்டன் ஊடகங்களிடம் சிக்கிக் கொண்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி மீண்டும் பேசும்பொருளாகின. இந்த நிகழ்வில் மேகனுக்கு அனுதாப அலைகளும் வீசத் தொடங்கின.

மேகனும் - பிரிட்டனின் நிறவெறியும்: பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். ஆனால், அரசக் குடும்பத்தினரும், பிரிட்டன் ஊடகங்களும் கனிவான முகத்தை மேகனுக்கு காட்டவில்லை. நிறம் சார்ந்து அவர் பிரிட்டன் ஊடகங்களால் தொடர்ந்து விமர்சனத்து உள்ளானார். ஊடகங்களால் டயானாவுக்கு என்ன நடந்ததோ, அதுவே மேகனுக்கும், ஹாரிக்கும் நடந்தது. ஒருகட்டத்தில் இதனை ஏற்று கொள்ளாத ஹாரி - மேகன் இணை இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாகக் அறிவித்தனர். இருவரின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.

அதன்படி, இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெற மாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகனும் கனடா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய நேர்காணல்: மேகன் மார்கல் கடந்த ஆண்டு ஓப்ரா நிகழ்ச்சியில் அரசக் குடும்பத்தில் தனக்கு நடந்ததை வெளிப்படையாகவே பேசி இருந்தார். அதில் மேகன் பேசும்போது “நான் கர்ப்பமாக இருந்த காலங்களில் என் மகன் பிறந்த பிறகு எவ்வளவு கருப்பாக இருப்பானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். அவனுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது, அவனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படாது' என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. நிறைய முறை இனி உயிர் வாழக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவரிடம் உதவி கோரினேன். அவர், 'என்னால் உதவ முடியவில்லை. அது குடும்பத்துக்கு உகந்ததில்லை' என்றார். தற்போது எங்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறக்க இருக்கிறது'' என்று மேகன் மார்கல் தெரிவித்தார்.

“அரசக் குடும்பத்தில் நிறவெறியால் நான் ஒதுக்கப்பட்டாலும், ராணி என்னிடம் அக்கறையாகவே நடந்துக் கொண்டார்” என்று மேகன் அந்த நேர்காணலில் பதிவு செய்திருந்தார். ஆனாலும் அந்த நேர்காணல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதுகுறித்து விளக்கமளிக்க அரசக் குடும்பம் அப்போது மறுத்துவிட்டது. சில நாட்களுக்குப் பின்னர் இதுகுறித்த கேள்விக்கு இளவரசர் வில்லியம் “அரசக் குடும்பத்தில் நிறவெறி இல்லை” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்திருந்தார்.

இம்மாதிரியான சர்ச்சைகளுக்கு இடையில்தான் ஹாரியும் - மேகனும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள லண்டன் வந்திருக்கிறார்கள். மேகனின் வருகையை இப்போதே பிரிட்டன் ஊடகங்கள் சில விமர்சிக்க தொடங்கிவிட்டன. எனினும், தனது இந்த கடின காலக்கட்டத்தில் ஹாரி அவரது பக்கம் உறுதுணையாக இருப்பதை மேகன் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். ராணியின் இறுதி நிகழ்வுகளிலும் நாம் இதனை காண முடிந்தது.

பிரிட்டனின் வரலாறும் சரி, அதன் அரசக் குடும்ப வரலாறும் சரி, பெரும் குற்றங்களுக்கு மத்தியில்தான் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நூற்றாண்டிலும் அங்கு நிறவெறிப் போக்கு அனைத்து நிலைகளிலும் தொடர்வது என்பது நாகரிக சமுதாயத்திற்கு உகந்ததல்ல என்பதையே உணர்த்துவதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x