

இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மோசூல் நகருக்குள் அந்த நாட்டு அரசுப் படை நேற்று தடுப்பு அரண்களை உடைத்து நுழைந்தது.
இதனிடையே ஐ.எஸ். தீவிர வாத தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி வெளியிட்ட ஆடியோ உரையில், ஐ.எஸ். வீரர்கள் சாகும்வரை போரிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இராக்கில் அரசுப் படை களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதி களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மோசூலைக் கடந்த 2014-ல் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அந்த நகரை மீட்க இராக் அரசு படைகள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாகப் போரிட்டு வருகின்றன. அவர்களுக்கு அமெரிக்க கூட்டுப்படை பக்க பலமாக செயல்படுகிறது.
பாக்தாதி ஆடியோ
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி, மோசூல் போர் குறித்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:
ஷியா பிரிவினர், அமெரிக்க கூட்டுப்படை, குர்து படை, துருக்கி, சவுதி அரேபிய ஆதரவு சன்னி பிரிவினரிடம் இருந்து மோசூல் நகரை பாதுகாப்பது நமது கடமை. நமது அமைப்புக்கு எதிராக சவுதியும் துருக்கியும் தாக்குதல் நடத்தி வருகின்றன. எனவே நாம் அவர்களுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒவ்வொரு வீரரும் எதிரிகளைத் தீரமாக எதிர்த்துப் போரிட வேண்டும். சாகும்வரை களத்தில் நின்று போரிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு அபுபக்கர் அல்-பாக்தாதியின் வீடியோ உரை வெளியானது. அதன்பின்னர் இராக் படையின் தாக்குதலில் அவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியா கின. தற்போது அவரது ஆடியோ பதிவு மட்டுமே வெளியிடப்பட் டுள்ளது. அந்த ஆடியோவின் உண்மை தன்மை உறுதி செய்யப் படவில்லை.
அரசுப் படைக்கு வெற்றி
இந்நிலையில் நீண்ட போருக்குப் பிறகு அரசுப் படைகள் நேற்று தடுப்பு அரண்களை உடைத்து மோசூல் நகரின் கிழக்குப் பகுதியில் புகுந்தது. இதுகுறித்து இராக் ராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கூறியதாவது: நகரில் சிக்கியுள்ள பொதுமக்களை முதலில் பாது காப்பாக வெளியேற்றுவோம். அதன்பின்னர் நகருக்குள் ஒளிந் திருக்கும் அனைத்து ஐ.எஸ். தீவிரவாதிகளும் அழிக்கப் படுவார்கள். விரைவில் முழு நகரமும் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.