Published : 13 Sep 2022 02:36 PM
Last Updated : 13 Sep 2022 02:36 PM

பிரிட்டனில் அரசாட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டப்பட்டதற்கு எதிராகவும், அரசாட்சிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தது பேசுபொருளாகியுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து புதிய மன்னராக 73 வயது நிரம்பிய சார்லஸ் பொறுப்பேற்றிருக்கிறார். இந்நிலையில் பிரிட்டனின் மன்னராக சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், அங்கு நிலவும் அரசாட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு பேரை பிரிட்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சார்லஸ்ஸை மன்னராக நியமித்தது யார்? என்று கேள்வி எழுப்பிய ஆக்ஸ்போர்டை சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டவர்களில் மற்ற மூவர் எடின்பர்கை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.

கைது நடவடிக்கை குறித்து தொழிலாளர் கட்சியின் எம்.பி சாரா கூறும்போது, “இந்த கைதுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தங்களது கருத்தைக் கூறுவதற்காக எந்த நபரும் கைது செய்யப்படக் கூடாது” என்றார்.

கைது நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் ஆக்ஸ்போர்ட், எடின்பர்க்கில் அரசாட்சிக்கு எதிரானவர்களின் ஆர்பாட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x